பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. அமைச்சர் வாழ்வு

வாதவூரடிகட்கு மதுரையில் நல்ல வரவேற்பு. பல மரியாதைகளுடன் அரசன் வரவேற்கின்றான். வரிசைகள் பல நல்கி தென்னவன் பிரம்மராயன் என்ற விருதையும் அளித்துத் தன் ஆட்சியில் அமைச்சராகவும் ஆக்கிக் கொள்ளுகின்றான். இதனைத் திருவாதவூரடிகள் புராணம்,

    தென்னவன் பிரம ராயன்
         என்றருள் சிறந்த நாமம் 
    மன்னவர் மதிக்க கல்கி
         வையகம் உய்வதாக 
    மின்னவ மணிப்பூண் ஆடை
         வெண்மதிக் கவிகை தண்டு 
    பொன்னவிர் கவரி வேழம்
         அளித்தனன் பொருநை நாடன் 
     (பொருநை நாடன் - பாண்டியன்) 

என்று குறிப்பிடுகின்றது.

அமைச்சர் பதவி எளிதானது அன்று. தலைவனுக்குத் தக்க வழிகளை ஆராய்ந்து கூறவல்லவரே சிறந்த அமைச்சராவார். அறம் அறிந்து, கல்வியால் நிறைந்து, அமைந்த சொல்லுடையவராய், எக்காலத்திலும் செயல் ஆற்றும் திறனுடையவராக இருப்பவரே சிறந்த அமைச்சராகத் திகழ முடியும். இயற்கையான அறிவு நுட்பம், நூல்களைக் கற்றறிந்ததால் கிடைக்கும் அறிவுக் கூர்மை என்ற இருவகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/28&oldid=1012175" இலிருந்து மீள்விக்கப்பட்டது