பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274 - . மாணிக்கவாசகர்



நீரினுள் பிரதிபிம்பிக்கின்ற சந்திரன் தாண்டவமாடுவது போன்று தென்படுகின்றது. தடாக நீரிலே தேக்கம் ஏற்படுவதற்கு ஏற்ப அதனுள் ஏற்படுகின்ற திங்களின் அசைவு குறைகின்றது. நீர் முற்றிலும் அமைதியுறுமிடத்து நிலாவின் தோற்றமும் அதனுள் நிலைபேறு எய்துகின்றது. மனமோ அலை நிறைந்த தடாகம் போன்றது. அடங்கிய மனம் அலையற்ற தடாகம் போன்றது. தூய்மையும் அமைதியும் அடையப் பெற்ற மனம் மாண்புமிகப் படைத்ததாகும், இறைவன் படைப்பில் அதற்கு அமைதியான சிறப்பு உண்டு.

புறத்திலே உள்ள அகிலாண்டங்களையும் தூய மனம் படைத்திருப்பவன் அகத்திலும் காண முடியும். புறத்தில் வெட்டவெளி எவ்வளவு விசாலமானதோ அவ்வளவு விசால மான வெட்ட வெளியை அகத்திலும் காணலாம். புறவுலகில் ஆழ்கடல் எவ்வளவு ஆழமானதோ அவ்வளவு ஆழமான அமைப்பை அகத்திலும் காணமுடியும். அண்டத்தில் உள்ளவையெல்லாம் பிண்டத்திலும் உள்ளன. தன்னிடத்து அமைந்திருக்கின்ற தெய்விக விபூதிகளை முற்றும் அறிகின்றவனுக்கு மேலும் அறிந்துகொள்ள ஒன்றும்இல்லை. அப்படி மிளிர்வன யாவும் மாயா சகிதனான ஈசுவரனது விபூதிகளாம். பிரளய காலத்தில் அவை யாவும் ஒடுங்குகின்றன. மனிதன் படைத்துள்ள தூய மனத்தை ஒடுக்கி விட்டு நிர்விகல்ப சமாதி. எய்துவானாகில் அவன் சிதம்பரத்தை அடைந்தவன் ஆகின்றான். இறைவனது ஐந்தொழில்களைக் கடந்து மேலே போனவன் ஆகின்றான். அவனது மனோநாசம் அதற்கு உபாயமாகின்றது.

  வில்இயல் கல்நுத லார்மயல்
     இன்று விளைந்திடும் ஆகாதே (அடி-3) 

(வில்இயல் - வில்லின் தன்மையமைந்த: நல்நுதலார் - அழகிய நெறியையுடையவர்கள்; மயல் - மயக்கம்)