பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்கள் 297


 விற்றாகிய மனச்செம்மையினை வழங்கும் ஆற்றல் நிறைந்த சொற்களால் இயன்றமையின் இந்நூல் திருவாசகம் என்ற திருப்பெயர் பெறுகின்றது. வாசகம்-சொல். இறைவன் தம்மையாட்கொண்ட அருளின் சிறப்பை உலகத்தவர்க்கு உரைப்பது போலவும், பிரிந்ததனால் உண்டான வருத்தத்தைப் பற்றிப் பெருமானோடு உரையாடுதல் போலவும் இந்நூல் முழுவதும் அமைந்துள்ளது. ஆகவே பேச்சு முறையால் அமைந்த இந்நூல் 'வாசகம்’ என வழங்கப் பெற்றிருக்கலாம் எனக் கருதுவதற்கும் இடம் உண்டு. கடவுளைப் பற்றிய வாசகமாயிருத்தலின் 'திருவாசகம்’ எனப் பட்டது எனக் கருதுவோரும் உளர்.

திருவாசகத்தின் பெருமை : ' இந்நூல் படிப்பவர் மனத்தைப் பரவசப்படுத்தும் பான்மையது; ஒருமுறை ஒதினாலும் ஆன்மா தன் தன்மை கெட்டுச் சிவத்தன்மை அடைதல் தெளிவு. அம்பலத்தாசைப் பற்றிப் பேசும் இது அலைகின்ற மனத்திற்கு ஒய்வு அளிக்கும் ஓர் அருமருந்து. வாலறிவன் அருளை வாரி வழங்கும் கற்பகத்தரு, படிப்போர் மனத்தில் சிவானந்தப் பெருங்கடலைச் சிந்தையில் நிறைவித்துத் திருமேனி எங்கும் பரவச் செய்து புளகாங்கித முறுத்தும் புண்ணிய மறை. ஊனினை உருக்கி உள்ளத்தைப் பெருக்கி உலப்பிலா ஆனந்தத்தை நல்கும் பெருநூல். எளிய சொற்களால்-விழுமிய பொருளால்-இழுமென் ஒசையால் - ஒதுவார் உள்ளத்தைத் தன்வயப்படுத்தும் தகுதியுடையது. சிந்தை செல்லாச் சேணெடுந்தூரத்திற்கு நம்மை இட்டுச் சென்று அந்தமில் பேரின்பத்தை அளிக்க வல்லது. உரைமனம் கடந்து நிற்கும் ஒண்மையது என்று சுருங்கச் சொல்லி வைக்கலாம்.

சான்றோர் கருத்துகள்: இந்நூலின்பெருமையைக்குறித்து சான்றோர்கள் பலர் பலவாறாகக் குறிப்பிட்டுள்ளனர். ஒரு சிலரது கருத்துகளை மட்டிலும் ஈண்டுக்காட்டுவேன்