பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 மாணிக்கவாசகர்



சொல்லெனக் கொள்ளவும் முடியாது. ஒருவிதத்தில் இஃது ஒரு சொல்; இன்னொரு விதத்தில் இன்னொரு சொல். இதைப் போன்றதே இறைவனோடு ஆன்மா ஐக்கியப்படும் விதமும் என்பதே சித்தாந்தத்தின் முடிவாகும். ஒவ்வொரு பாடலிலும் இக்கருத்து அமைந்திருப்பது மகிழ்ச்சி தருவ தாகும். "என் சென்னியில் இறைவனுடைய திருவடிகள் மன்னித் திகழ்வதற்கு அத்திரு வடிகளின் அருளின் நீர்மையே காரணம் அன்றி என் தகுதி காரணம் அன்று" என்று குறிப் பிடுகின்றார் அடிகள். ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடி யானும் (4-4-8) என அப்பர் பெருமான் போற்றியவாறு எங்கும் நீக்கமற நிற்பன இறைவன் திருவடிகள் ஆதலின் சேவடிக் கணம் என்கின்றார். கணம்-தொகுதி.

இப்பதிகத்தின் ஐந்தாம், திருப்பாடலில், "திருப்பெருந்துறை மேவினான், காயத்துள் அமுது ஊற நீ கண்டு கொள் என்று காட்டிய தூய மாமலர்ச் சேவடிக்கணம்", என்றது திருப்பெருந்துறை இறைவன் குருவாக எழுந்தருளி வந்து அடிகளுக்கு உபதேசத் தருளிய திருவடி ஞானத்தை. ஆன்மாவாகிய உடலுக்குள்ளே உயிராயிருக்கப் பெற்ற சிவஞானமாகிய தேனினைச் சொரியும் திருவடிப் பேரின்ப அநுபவத் தினை,

  காயத்துள் மெஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே 
  மாயக்கள் உண்டாரென் றுந்தீபற
     வரட்டுப் பசுக்களென் றுந்தீபற(43)

என வரும் திருவுந்தியார் பாடலில் உய்யவந்த தேவநாயனார் வெளியிட்டுள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கி மகிழத்தக்கது. "நங்கையீர் எனை நோக்குமின்" எனத் தொடங்கும் திருப்பாடலில் அடிகள் தம்மை இறைவனாகிய ஆன்மநாயகனைக் காதலித்த மகளிர் நிலையில் வைத்துக் கூறியுள்ளமை காணத் தக்கது. நாயக-நாயகி பாவனையை நன்கு அநுபவிக்கவேண்டு மானால் ஆழ்வார்களின் பாசுரங்களை நாடவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/60&oldid=1012353" இலிருந்து மீள்விக்கப்பட்டது