பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 43




அச்சோப்பதிகம் (51)

திருவாசகப் பதிப்புகளில் இறுதி யாகவுள்ள பதிகம். இதற்கு "அநுபவவழி அறியாமை” என்பது முன்னோரின் கருத்துரை. சிவபெருமான் தம் பொருட்டு எளிவந்தருளிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் அடிகள் தாம் பெற்ற அருளார் இன்பத்தை வியந்து போற்று வதாக அமைந்தது இப்பதிகம். அச்சோ என்பது வியப்பினைப் புலப்படுத்தும் இடைச் சொல். இஃது "அச்சோ பத்து" எனவும் சில சுவடிகளில் குறிக்கப்பெற்றுள்ளது. ஒன்பதே பாடல்கள் உள்ள இத்தொகுதியை அச்சோப்பதிகம்’ என்று வழங்குதலே பொருத்தமுடையதாகும். இப்பதிகத்தில்,

  முத்திநெறி யறியாத
     மூர்க்கரொடு முயல்வேனைப் 
  பத்திநெறி அறிவித்துப்
     பழவினைகள் பாறும் வண்ணம் 
  சித்தமலம் அறிவித்துச்
     சிவமாக்கி எனையாண்ட 
  அத்தனெனக் கருளியவா
     றார் பெறுவார் அச்சோவே  (1) 

(மூர்க்கர்-அகங்காரிகள்; பாறும் வண்ணம்-சிதறும்படி: சித்தமலம் அறுவித்து-பாச க்ஷயம், பண்ணி)

என்பது முதல் திருப்பாடலாகும்.

இறைவனை அடைதற் குரிய நெறிகள் இரண்டு. ஒன்று, முத்திநெறி, இது சரியை கிரியை யோக ஞானங்களால் முதிர்ந்த அறிவுடைய பெரு மக்கள் மட்டுமே அறிந்து கடைப் பிடித்தற்குரிய அருமை யுடையது. இரண்டு, பத்தி நெறி. பேரன்பின் முதிர்ச்சியே பத்தி. இஃது உலகமக்கள் அனைவரும் அன்பினால் பின் பற்றுதற்குரிய எளிமை வாய்ந்த வழி.(3) இப்பாடலில் அடிகள்


3. வைணவசமயத்தில் பத்தி நெறியை அட்டாங்கயோக முறைகளால் அதுட்டிக்கவேண்டும் எனக் காட்டிக் கடுமையான வழியாகக் கொள்வர். பிரபத்திநெறி (சரணாகதிநெறி) எளிமையது என்று காட்டுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/61&oldid=1012356" இலிருந்து மீள்விக்கப்பட்டது