பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 147 என்பதன் முதற்சொல் மைத்துணி என்பதே. மச்சிக்கு ஆண்பால் மச்சான். திருமணம் செய்துகொள்ளும் முறை உள்ளவர்களை மைத்துனன் - மைத்துணி என்பது வழக்கம். இதற்கு ஒர் இலக்கியச் சான்று திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் உள்ள சான்றழைத்த திருவிளையாடல் என்னும் பகுதியிலிருந்து வருமாறு: வணிகன் ஒருவன் தன் அம்மான் மகளைச் சுற்றத்தார் ஒப்புதலுடன் திருமணம் செய்துகொள்ள அழைத்துக் கொண்டு வடபுறமிருந்து மதுரைக்குச் செல்லும் வழியில் திருப்புறம்பியம் என்னும் ஊருக்கு அருகில் மைத்துனியாகிய அப்பெண் நடக்கமுடியவில்லை என்று சொல்ல அன்றிரவு அவ்வூரிலேயே தங்கிவிட்டனர். இச்செய்தியை, 'மைத்துணி நடக்கமாட்டேன் இளைத்தனன் என்ன வாய்ந்த உத்தமன் பொருளனைத்தும் உற்றவர் கைக் கொடுத்து மெத்தென மாதைக் கொண்டு வருகுவல் விரைவில் நீங்கள் முத்தெயில் மதுரை தன்னிற் போமென மொழிந்து விட்டான்' என்னும் (62-7) பாடலால் இவ்வுறவு முறையறியலாம். உலகியலில், கணவனுடன் பிறந்தவள், மனைவியுடன் பிறந்தவள், அம்மான் மகள், 'அத்தை மகள் ஆகியோரை மச்சி என அழைப்பர். அதாவது, சம்பந்தி (மருவி) முறை உள்ளவர்களே மச்சியாவர். சம்பந்திகள் (மருவியோர்) ஒருவர்க் கொருவர் பெண் கொண்டு கொடுத்துத் திருமணம் நடத்துவது உண்டு. இங்கே திவாகர நிகண்டில் உள்ள இரண்டு நூற்பாக்களின் உதவி தேவைப்படுகிறது.