பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பேராசிரியர் ந.சஞ்சீவி கோட்டை கொத்தளங்களெல்லாம் இடித்துத் தூளாக்கப்பட்டன. ஆயுதங்கள் யாவும் பறிமுதலாயின. எது நேர்ந்தாலும் ஏதும் செய்ய முடியாத பயங்கரச் சூழ்நிலையை மக்கள் மனத்தில் உண்டாக்கினான் பானர்மன். இதில் வெற்றி கண்ட அவன் கட்டபொம்மனை விசாரணைக்காகக் கயத்தாற்றுக்குக் கொண்டு போனான்; வீரபாண்டியனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினான். நீதியின் பெயரால் விசாரணை நாடகம் நடந்தது. முடிவு என்ன? தூக்குத் தண்டனை ஆம். நாடாளும் மன்னனுக்கு நாடோடி அளித்த தீர்ப்பு அது. வீரபாண்டியன் தனக்கு விதித்த தண்டனையைக் கண்டு நடுங்கினானில்லை. ஆனால் பானர்மன் கண்கள் வீரபாண்டியனைக் காண அஞ்சின. முன்கூட்டியே ஆணை அனுப்பி வீர பாண்டியனைத் தூக்கிலிடும் கொடிய காட்சியைக் காண்பதற்காகவே அழைக்கப்பட்டு வரிசையாக அமர்த்தப்பட்டிருந்த பாளையக்காரர் அனைவரும் பொம்மைகள் போல அசையாதிருந்தனர். அசைவதற்குக் கூட அவர்களுக்கு உரிமை ஏது? வீரபாண்டியன் உள்ளம் குமுறியது. அவன் கண்கள் தீப்பிழம்பாய் விளங்கின. அவன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான்; எங்கும் துரோகிகள் கூட்டமே இருக்கக் கண்டான். பேடிகளே, நீங்களும் தமிழர்களோ' என்று அவர்களை நோக்கி அவன் இரு விழிகளும் பேசின. அவன் தன் அருமைத் தம்பியின் திருமுகங் காணத் துடிதுடித்தான் இயலவில்லை; அந்த வாய்ப்பும் இல்லையே! என்று உள்ளம் வெந்தான்; எனினும், தன் நெஞ்சுறுதியைக் கைவிட்டானில்லை; தன்னைக் கொல்லக் காத்திருந்த கட்டைப் புளியமரத்தின் அடியில் சென்று நின்றான். அவனை அறியாமல் அவன் உதடுகள் பேசின. இப்படி அந்நியனால் கைது செய்யப்பட்டுச் சாவதைவிட, என் அருமைப் பாஞ்சைக் கோட்டையை விட்டு வெளியேறாது அங்கேயே பகைவனால் வெட்டப்பட்டு வீர மரணம் அடையாது போனேனே' என்று அவ்வீரன் கூறினான். இச்சொற்களைக் கூறிச் சில வினாடிகள் கண்மூடிப் பேசாமல் நின்றான். பிரார்த்தித்தான் இறைவனே, இந்திய விடுதலைப் போரில் ஈடுபடும் பேற்றைத்தான் எனக்குக் கொடுத்தாய். ஆனால், அதை முடித்துவைக்க என்னால் இயலவில்லை. ஆயினும், என்வீரமரபினரேனும் அதைத் தொடர்ந்து நடத்தி, துச்சமென அடிமை வாழ்வை உதறித்தள்ளி, சுதந்தர மக்களாய் வாழ அருள் புரிவாயாக!' என்றுதான் அவன் ஊனும் உள்ளமும் உயிரும் பிரார்த்தித்திருக்கும். பிரார்த்தனை முடிந்தது. கட்டைப் புளியமரத்தில் வீரபாண்டியனைக் கொல்வதற்கென்றே அரவு போலச் சுருண்டிருந்த கயிற்றை அவ்வீர மகன் எடுத்தான்; தன் கழுத்தில் மாட்டிக் கொண்டான், காலடியிலிருந்த நாற்காலியை உதைத்துத் தள்ளினான்; இந்த உலக வாழ்வையும் உதறி எறிந்தான்!