பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை வட இந்தியத் தலைவர் வான்புகழ்பெறுகின்றனர். இந்தியா முழுவதும் அறிந்து போற்றும் பெருமை அவர்களுக்கு எளிதில் வாய்க்கின்றது; உலகம் அறியும் சிறப்பும் வாய்க்கின்றது. தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஏற்ற அறிவும் ஆற்றலும் பெற்றிருந்தும், அவ்வாறு உயர்ந்து விளங்குதல் அரிதாய் உள்ளது. காரணம், தமிழர் தம்மவரின் சிறப்புகளை உணராமையும், உணர்ந்தாலும் போற்றாமையுமாகும். தமிழ் நாட்டுச் செய்தித் தாள்களும் பிறர்க்குத் தரும் பெருமையிலும் விளம்பரத்திலும் காற்பங்கும் தமிழர்க்குத் தருவதில்லை. அதனால், வடநாடு புகழ்மிக்க தலைவர்கள் நிறைந்த நாடு ஆகின்றது; தமிழ் நாடு திக்கற்றுத் திகைக்க நேர்கின்றது. நெடுங்காலமாகவே இத்தகைய புறக்கணிப்பு இருந்து வருதலை வரலாற்றுப் புத்தகங்கள் உணர்த்துகின்றன. வரலாற்றில் புகழ் பெற்ற வடநாட்டு வீரமாந்தர் பலர் காணப்படுகின்றனர். தமிழ் நாட்டின் வீரப் பெருமக்களான கட்டபொம்மன், மருது பாண்டியர் முதலானோர்க்கும் உரிய சிறப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலை நீடிக்குமானால், தமிழகத்திற்கு உய்வு இல்லை என்பதை இன்று பலரும் உணர்ந்து வருகின்றனர். தம்மவரை மறவாமல் போற்றிப் பிறரையும் போற்றுதலே நல்ல நெறியாகும். இந்தப் புத்துணர்ச்சியின் பயனாக இன்று சில நல்ல நூல்கள் வெளி வரத் தொடங்கியுள்ளன. மானங்காத்த மருது பாண்டியர் என்னும் இந்நூல் இத்தகையதாகும். அந்நியரின் ஆட்சியை அஞ்சாமல் எதிர்த்துத் தமிழகத்தின் பெருமையைக் காத்துத் தம் உயிரைப் பலியாக்கிய வீரப்பெருந்தகையினர் மருது பாண்டியர். உணர்ச்சி மிக்க இவர்தம் வரலாற்றைத் திருவாளர் ந. சஞ்சீவி எழுதியுதவியது காலத்திற்கு ஏற்ற நல்ல தமிழ்த் தொண்டாகும். துடிதுடிப்பான தமிழுள்ளம் இவர்தம் நடையில் புலப்படுகின்றது. இந்த நன்முயற்சியைத் தமிழகம் வரவேற்று மகிழும் என நம்புகிறேன். மு. வரதராசன்.