பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை 'மருதிருவர் என்ற இவ்விழுமிய வரலாற்று நூலை ந. சஞ்சீவி அவர்கள் மிகச் சிறந்த முறையிலே ஆக்கித் தமிழுலகிற்கு ஈந்துள்ளார்கள். தமிழ் நாட்டின் வரலாறு சிறந்த முறையில் எழுதப்படவேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு சாலச் சிறந்த எடுத்துக்காட்டாகும். வரலாற்று நூல்களிலே நாம் காண வேண்டிய வேகம், நிகழ் காலத்தையும் கடந்த காலத்தையும் இணைத்துக் காட்டும் பண்பு, வருங்காலத்திற்கு வழி வகுக்கும் தன்மை என்ற இவ்வுயரிய நோக்கங்கள் எல்லாம் இந்த வரலாற்று நூலைச் சிறப்பிக்கின்றன. தமிழிலே வரலாறு எழுதுவது என்பது பெரும்பாலும் மொழி பெயர்ப்பாகவே அமைகின்றது. இது தமிழுக்கே இழுக்குத் தேடுவதாகும். வரலாற்றின் ஆதாரங்கள் எந்த மொழியிலிருந்தாலும் அவற்றைக் கோவை செய்து அவற்றின் கருத்துகளை மட்டும் நல்ல தமிழிலே எழுதுவது இன்றும் நமக்குப் புதியதோர் கலையாகவே இருந்து வருகின்றது. இக்குறையைப் பூர்த்தி செய்யும் முறையில் ஆசிரியர் இந்நூலின்கண் தெளித்தெடுத்த வரலாற்றை இனிய தமிழிலே எழுதிக் காட்டியுள்ளார். தமிழ் நாட்டின் வரலாற்றில் இந்நூல் ஒரு முக்கியப் பகுதியை விவரிப்பதாகும். கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் தமிழ் நாட்டை இன்னல் சூழ்ந்தது; வணிகராய் வந்த ஆங்கிலேயர் நாட்டையே கைப்பற்ற எண்ணிய காலம் அது. அந்த நாள்களில் இந்த ஆங்கிலேய எண்ணத்திற்குத் தென்னிந்தியாவில் பெரியதோர் எதிர்ப்பு இருந்தது. இதன் வரலாறு இன்றும் எழுதப்படாததொன்று என்றே நாம் சொல்ல வேண்டும். கட்டபொம்மு, ஊமைத்துரை, அபூர்வ சகோதரர்களாய் அமைந்த மருது பாண்டியர், இன்னும் இவர்களைப் போன்ற பலரும் வெள்ளையரைக் கொஞ்சக் காலமேனும் விரட்டியடித்தார்கள். ஆனால் இவர்களைப் பற்றி நமக்குத் தெரிவதை விட ஆங்கிலேயரே அதிகம் தெரிந்திருந்தார்கள்: இப்பொழுதும் தெரிந்திருக்கிறார்கள். ஆயினும், இவர்களைப் பற்றிப் பேசாத தென்னாட்டு வரலாறு வரலாறாகாது. பிற்காலத்தில் வந்த விடுதலை உணர்ச்சிக்கு வித்திட்ட விடுதலை வீரர்கள் இவர்கள். அப்படிப்பட்டவர்களுள் சாலச்சிறந்த இருவரைப் பற்றி 'மருதிருவர் என்ற இந்நூல் பேசுகின்றதென்றால் இந்நூலின் தகைமையும் பெருமையும் தானே விளங்குமன்றோ இந்நூல் வெற்று வரலாற்று நூல்மட்டுமன்று சிறந்த ஆராய்ச்சி நூலும் ஆகும். இது போன்ற நூல்கள்