பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடாதே. என் ஆற்றலை யறிந்தால் நீ இவ்வளவு மமதையாகப் பேசமாட்டாய். சரியாக இன்னும் ஒரு மாதத்தில் உன்னைக் காணத்திரும்பி வருகிறேன். அதற்குள் நீ உன் மனத்தை மாற்றிக் கொண்டு எனக்கு இளவரசியைக் கொடுத்துவிட்டால் சரி. இல்லாவிட்டால் என் மந்திர சக்தியால் உனக்கு என்னென்ன கெடுதல் செய்யவேண்டுமோ அவ்வளவும் செய்வேன். அதுவரையில் உன் அழகிய மகள் தூங்கிக்கொண்டே யிருக்கட்டும்" என்று கூறினான்.

அந்த மந்திரவாதி தன் கையில் மின்னிக் கொண்டிருந்த கோலை உயர்த்தி இளவரசியின் தலையில் ஓர் அடி அடித்தான். அவ்வளவு தான் பயத்தால் கண்ணை மூடிக் கொண்டிருந்த இளவரசி சோர்ந்து கீழே விழுந்தாள். அல்லிக்கொடி துவண்டு கிடப்பது போல் அவள் இரதத்தின் கீழ்த் தட்டில் தன்னினைவு அற்றுக்கிடந்தாள்.

மாமன்னர் சோமசுந்தர மாராயர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் நிமிர்ந்து பார்த்தபோது மந்திரவாதியைக் காணவில்லை. அவன் மறைந்து போய்விட்டான். -2-

17