பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

105

எல்லாம் பெண்ணுக்கு எழுதிவைத்து விடுவதாகவும் சொல்லி அண்ணனை ஏமாற்றினான் அல்லவா அந்த மோசக்காரன். அந்தப் பெண் அவனுடைய வாக்குப்படி என்னுடைய பெண்சாதி அல்லவா. வடிவாம்பாளை நான் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளை நாங்கள் கடைசி வரையில் வளர்த்தோம். அவளைக் கண்ணப்பா அபகரித்துக் கொண்டான். பட்டாபிராம பிள்ளை தானாகவே என் அண்ணனைக் கூப்பிட்டு, பரிச்சயம் செய்து கொண்டு, தன் மகளை எனக்குக் கொடுப்பதாக வாக்குறுதி சொல்லி எங்களைப் படுகுழியில் இறக்கினான். அவன் விஷயத்திலும் பழிதீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை என் மனசில் இருந்து வருகிறது. அதற்கு இதுதான் சந்தர்ப்பம். அவன் எனக்குக் கொடுப்பதாகச் சொன்னபடி அவளை நான் எப்படியும் கொண்டு வந்து கற்பழித்து மானபங்கம் செய்து கொஞ்ச காலம் வைத்திருந்து துரத்திவிட்டால் அவர்கள் செருக்குக்கு அதுவே போதுமான தண்டனையாகும். பரிசம் போடுவதற்காக இவர்கள் தயார் செய்திருக்கும் சாமான்களையும் நாம் அப்படியே அபகரித்துவிட வேண்டும். இவர்கள் சகலமான ஏற்பாடுகளையும் செய்து முடிவில் ஏமாறி அவமானப்பட்டுப் போக வேண்டும். இன்னார் கொண்டு போனார்கள் என்ற குறிப்பே தெரியாமல் நாம் அந்தப் பெண்ணை அபகரித்துக் கொண்டு வந்துவிட வேண்டும். இதனால் இரண்டு வீட்டாருக்கும் பெருத்த துயரமும் மானக் கேடும் உண்டாவது நிச்சயம்! முதலில் நாம் இந்தக் காரியத்தை முடிப்போம். இது நிறைவேறியவுடனே, திகம்பரசாமியார், கண்ணப்பா முதலியோரை ஒவ்வொருவராகப் பிடித்து வந்து காளி கோவிலில் பலிகொடுத்து விடுவோம். நாம் செய்வதை எல்லாம் ஒரே முட்டாகச் செய்தால், நமது பேரில் உடனே சந்தேகம் உண்டாகிவிடும். ஒரு காரியத்தை முடிப்பது; பிறகு கொஞ்சம் ஆறப்போடுகிறது; பிறகு இன்னொன்றைச் செய்வது. இப்படியே நாம் நம்முடைய பகைவரை எல்லாம் ஒருவர்பின் ஒருவராய் வெகு சீக்கிரத்தில் வேரறுத்து விடவேண்டும். போலீசார் இந்திரஜாலம், மகேந்திரஜாலம் செய்து குட்டிக்கரணம் போட்டால் கூட, இவைகளை எல்லாம் நாம்தான் செய்தோம் என்பதற்கு ஓர்