பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

மாயா விநோதப் பரதேசி

படுகொலையில் இறங்கலாமா? எதிலும் மிதமாக நடந்து கொள்ள வேண்டும். எதிலும் நிர்ணயம் இருக்க வேண்டும். திருட்டு, கொலை முதலியவைகளைச் செய்வதில் கூட, நாம் கொஞ்சம் நியாயத்தை அனுசரித்தே காரியத்தை நடத்த வேண்டும். திருடப்போகிறவர்கள் கூட சாமிக்கு ஆடு வெட்டிக் கோழி வெட்டி, சாராயம், அவல், கடலை வைத்துப் படைத்துப் பூசை போட்டுவிட்டுப் புறப்படுகிறார்கள். அப்படிப்பட்ட கொடியவர்கள் கூட சுவாமிக்குப் பயந்து, அவனுடைய உதவியை நாடியே தங்கள் தொழிலை நடத்துகிறார்கள். நாம் அவர்களிலும் கேவலமானவர்கள் அல்ல. ஆகையால், நாம் இப்படிப்பட்ட பெருத்த படுகொலையில் இறங்குமுன், அதற்கு சுவாமியின் சகாயம் கிடைக்குமா என்பதை யோசித்துச் செய்ய வேண்டும். அதுவுமன்றி, நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அவர்கள் நிச்சயதார்த் தத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பெறுமானம் உடைய சொத்துக்களோடு போகப் போகிறார்கள். அவ்வளவு பெரிய சொத்து ஆற்றோடு போவது யாருக்கு உபயோகப்பட போகிறது. நாம் வேறு விதமாக ஏதாவது தந்திரம் செய்து, நம்முடைய பகைவர்களைப் பிடிப்பதோடு அந்தச் சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டால், ஏழைகளான என்னுடைய ஆள்கள் தலைக்குக் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு பிழைத்துப் போவார்கள். அந்த நன்றி விசுவாசத்தை அவர்கள் மறக்காமல், நம்மிடம் இன்னம் அதிகப் பணிவாகவும் உறுதியாகவும் உண்மையாகவும் நடந்து கொள்வார்கள். இந்த விஷயங்களை, நாம் கவனிக்காவிட்டாலும், இன்னொரு முக்கியமான அம்சத்தை நாம் அசட்டையாக எண்ணக் கூடாது. அதாவது, இந்த ரயில்வே லைனில் இரவு பகல் அங்கங்கே ஆள்கள் காவல்காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் முக்கியமாக ஆற்றுப் பாலங்களுக்குப் பக்கத்தில் காவலாளிகள் இருப்பது நிச்சயம். ஒவ்வொரு வண்டியும் வருவதற்கு முன் இன்ஸ்பெக்டர் முதலியோர் வந்து பாலங்கள் சரியாய் இருக்கின்றனவா என்று தணிக்கை பார்த்துப் போவதுண்டு; நாங்கள் போய் தண்டவாளத்தைப் பெயர்ப்பதென்றால், இன்ஸ்பெக்டர் முதலியோர் வந்து