பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

மாயா விநோதப் பரதேசி

உரிமை பாராட்டி அப்படி விளையாடக்கூடிய மனிதர் யாராக இருக்கலாம் என்று அவள் எண்ணிப் பார்த்ததெல்லாம் வீணாயிற்று. தனது கண்ணைப் பொத்திப் பிடித்துக் கொண்டிருந்த கைகள் நிரம்பவும் மிருதுவாக இருந்தன. ஆகையால், அவர் ஆண் பிள்ளையா, அல்லது, பெண் பிள்ளையா என்பதைக்கூட அவள் நிச்சயிக்கமாட்டாதவளாய்த் தத்தளித்து நயமாகவும் அன்பாகவும் பேசத் தொடங்கி, “யார் அது? இப்படித்தானா அக்கிரமம் செய்கிறது? மனிதர் வருகிறார்கள் என்கிற குறியே இல்லாமல் திடீரென்று வந்து என்னை இப்படித்தானா பயமுறுத்தி விடுகிறது? என் உடம்பெல்லாம் நடுக்கம் எடுத்து விட்டதே?” என்று வீணாகானம் செய்வது போல அதிமாதுரிய மான குரலில் பேசினாள்.

அவளது கண்களைப் பொத்திக் கொண்டிருந்த மனிதர் உடனே தமது குரலை மாற்றிக் கொண்டு கீச்சுக்குரலில் பேசத் தொடங்கி, “நான் யார் என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னால்தான், நான் விடுவேன். இல்லாவிட்டால், இப்படியே கண்களை மூடிக் கொண்டுதான் இருக்கப் போகிறேன்” என்றார்.

அதைக் கேட்ட வடிவாம்பாள் அந்தக் குரல் இன்னாருடையது என்ற அடையாளம் கண்டு கொள்ள மாட்டாதவளாய் இரண்டொரு நிமிஷ நேரம் மெளனம் சாதித்து யோசித்து யோசித்துப் பார்க்கிறாள். அதுவரையில் எவரும் தன்னிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை ஆதலாலும், அப்படி நடந்து கொள்ளக் கூடிய அவ்வளவு அன்னியோன்னியமான சிநேகிதை வேறே யாரும் இருப்பதாக நினைவு உண்டாகவில்லை. ஆகை யாலும், அந்தப் பெண்மணி முற்றிலும் குழப்பமும் கலக்கமும் அடைந்து சிறிது நேரம் தடுமாற்றம் உற்றபின் மிருதுவாகப் பேசத் தொடங்கி, “நீங்கள் யார் என்பது கொஞ்சங்கூடத் தெரிய வில்லையே! போதும் விட்டுவிடுங்கள்” என்று நயமாகக் கூறினாள்.

அந்த மனிதர், “இவ்வளவுதானா உன் சாமர்த்தியம்! இந்த அற்ப விஷயத்தைத் தெரிந்து கொண்டு சொல்ல உன்னால் முடிய வில்லையே! சரி; விட்டுவிடுகிறேன், நீ தோற்றுப்