பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

மாயா விநோதப் பரதேசி

மனிதர் யாராக இருக்கலாம் என்று அவள் பன்முறை ஆழ்ந்து யோசித்த தெல்லாம் பயன்படாமல் போயிற்று. ஆனால், அவர் பேசியது நிரம்பவும் சிநேகப்பான்மையைத் தோற்றுவித்தது ஆகையாலும், அவர் இன்னார் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் தான் கோபிப்பது ஒழுங்கல்ல எனத் தோன்றியது ஆகையாலும், அவள் நிரம்பவும் பாடுபட்டுத் தன்னை அடக்கிக் கொண்டு புன்னகை வழிந்த முகத்தோடு பேசத் தொடங்கி, “நான் உங்களுடைய அடையாளத்தைக் கண்டுபிடிக்க மாட்டாமல் தோற்றுப் போனது என்னுடைய குற்றமன்று. என்னுடைய ஸ்தானத்தில் வேறே யார் இருந்தாலும் தோற்றுத்தான் போவார்கள். இந்த விஷயத்தில் குற்றம் உங்களுடையது என்று சொல்லுவதே பொருத்தம் உடையதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் நல்ல அறிவுடையவளாக இருந்து, மந்த அறிவினள் என்று சொல்லுவது இன்னொரு பெருத்த குற்றம் என்று சொல்லுகிறீர்கள். நான் நல்ல அறிவுடையவள் என்று நீங்கள் கொடுக்கும் பெருமையை நான் வகித்துக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும், அப்படிப்பட்ட நல்ல அறிவை உபயோகப்படுத்தி உண்மையை அறிந்து கொள்ளமாட்டாமல் என் அறிவு மழுங்கிப் போகும்படி செய்வதும் நீங்களே. ஆகையால் இரண்டு வகையிலும் குற்றம் உங்களுடையதே அன்றி என்னுடையதல்ல. அப்படி இருக்க நீங்கள் என்னைத் தண்டிக்கப் போவதாகச் சொல்வது நியாயமாகுமா என்று யோசித்துப் பாருங்கள். என்னைத் தண்டிக்கும் அதிகாரம், என் தாயார், தகப்பனார், மாமனார், மாமியார், என் பர்த்தா ஆகிய ஐவருக்குமே உண்டு. அதுவுமன்றி, நான் ஏதாவது பெருத்த தவறு செய்துவிட்டால், நியாயாதிபதிகள் தண்டிப்பார்கள். அப்படிப் பட்ட அதிகாரம் வாய்ந்தவர்கள் கூட நீங்கள் சொல்லும் இந்த இரண்டு குற்றங்களுக்கும் என்னைத் தண்டிக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். என்மேல் இப்படிப்பட்ட விபரீதமான பாத்தியம் பெற்ற நீங்கள் யார் என்பதே எனக்கு இன்னமும் விளங்கவில்லை. நீங்கள் எனக்கு என்ன விதமான தண்டனை கொடுக்க உத்தேசிக்கிறீர்கள் என்பதும் விளங்கவில்லை” என்றாள்.