பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

மாயா விநோதப் பரதேசி

வருகிறார்கள்; சில பட்டணங்களில் கட்டாயப்படிப்பு ஏற்படுத்திவிட்டார்கள். காலக்கிரமத்தில் எல்லா ஊர்களிலும் கட்டாயப் படிப்பு பரவிவிடும். இன்னம் இரண்டொரு தலைமுறைகளில் நம்முடைய நாட்டில் உள்ள ஒவ்வோர் ஆண் பிள்ளையும் ஒவ்வொரு பெண் பிள்ளையும் அவசியம் இங்கிலீஷ் பாஷை கற்க நேரிடும். அதன் பிறகு நம்முடைய தேசம் எந்த நிலைமையில் இருக்கும் என்பதை நாம் இப்போதே ஒருவிதமாக யூகித்துக் கொள்ளலாம். இந்தக் காலத்தில் இங்கிலீஷ் படித்த ஆண் பிள்ளைகள் மாறி இருப்பது போல, இங்கிலீஷ் படித்த பெண் பிள்ளைகளை எடுத்துக் கொண்டால், அவர்களுள் பெரும் பாலோர் விபரீதமான நோக்கங்களையும் நடையுடை பாவனைகளையும் உடையவர்களாக மாறிப் போயிருக்கிறார்கள். உன்னைப் போல, பழைய காலத்து வழக்கப்படி நடக்கும், ஸ்திரீகள் எல்லாம் அக்ஞான இருளில் அழுந்தி அடிமை நிலைமையில் இருப்பதாக அவர்கள் கருதி, உங்களை இந்த நிலைமையில் இருந்து கைதுக்கி விடுவதற்காக சில சங்கதிகளையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்தால், நம்முடைய தேசம் வெகு சீக்கிரத்தில் சகலமான விஷயங்களிலும் வெள்ளைக்காரர் தேசம் போலவே மாறிவிடும் என்ற உறுதி நிச்சயமாக ஏற்படுகிறது. இப்படி நம்முடைய தேசமே அடியோடு தலைகீழாக மாறிக் கிடக்கும் இந்தக் காலத்தில், நீ புருஷனுக்கெதிரில் பலகாரம் சாப்பிடமாட்டேன் என்பது நிரம்பவும் அநாகரிமாகத் தோன்றுகிறது. ஆண் பிள்ளைகளுக்கெதிரில், ஸ்திரீகள் எவ்விதமான தேக பாதையையும் காட்டிக்கொள்ளக் கூடாதென்று நீ சொல்வது சர்வ சிலாக்கியமான கொள்கைதான். அப்படியேதான் நம்முடைய பூர்வீக ஸ்திரிகள் நடந்து வந்தார்கள். இன்னமும் அநேகர் நடந்து வருகிறார்கள். அப்படி நடந்தால், புருஷர்களுடைய கண்களுக்கு, ஸ்திரிகள் தத்ரூபம் தேவதைகள் போல இன்ப வடிவமாகத் தோன்றுவார்கள் என்பது நிச்சயமே. அப்படிப்பட்ட அருமையான கொள்கை களை எல்லாம் நம்முடைய ஸ்திரீகள் சுத்தமாக விட்டொழிக்க வேண்டும் என்று நவீன நாகரிகத்தார் படும்பாடு அற்ப சொற்பமல்ல. அந்தக் கொள்கை வெள்ளைக்காரர்களுடைய