பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

171

தேஜஸோடு நிலைத்து நின்று பிரகாசிக்கும். அதைப் பற்றி கொஞ்சமும் சந்தேகமே இல்லை. பொருள் உள்ள பணக்காரர்களே பெரியவர்கள், பூசனைக்கு உரியவர்கள் என்பது அயல் நாட்டாரின் கொள்கை. நம்முடைய நாட்டாரின் கொள்கை சகலத்தையும் துறந்து ஆசாபாசங்களை அகற்றி, தமக்கென்று ஓர் அற்பப் பொருளையும் வைத்திராத துறவிகளையே நாம் பெரியவர்கள் என்றும், பூசனைக்கு உரியவர்கள் என்றும் மதித்து வணங்குகிறோம். நமக்கு மனிதர் ஒரு பொருட்டல்ல. அவருடைய ஜீவாத்மாவின் நடத்தைத் தூய்மையும், குணத் தூய்மையும் பரிபக்குவ நிலைமையுமே நமக்கு முக்கியமானவை. மனிதரை மனிதர் வணங்குவதை நாம் அவருக்குள்ளிருக்கும் தெய்வாம்சம் பொருந்திய ஜீவாத்மாக்களை வணங்குவதாகக் கருதுகிறோம் ஆதலால், அப்படி வணங்குவதை நாம் ஓர் இழிவாகக் கருதுகிறதில்லை. கீழ்ச்சாதியாரான நந்தனிடத்தில் பரிபக்குவ நிலைமை இருந்ததைக் கண்டு பிராம்மணர் அவருடைய காலில் விழுந்து உபதேசம் பெற்றுக் கொள்ளவில்லையா. அதுபோல நம்முடைய நாயன்மார்களிலும், ஆழ்வார் ஆசாரியர்களிலும், கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்களும், பரம ஏழைகளும் எத்தனைபேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் அவர்களுடைய ஜாதி முதலியவற்றின் இழிவைக் கவனியாது தெய்வங்களாக எண்ணிப் பூஜிக்கவில்லையா. அப்படி நாம் செய்வது எதனால்? அவர்களுடைய ஜீவாத்மாக்களின் முதிர்ச்சியைக் கருதியே நாம் அவர்களை நமக்கு வழிகாட்டிகளாக மதித்து வணங்குகிறோம். அயல்நாட்டார் இப்போது நாளடைவில் இந்தக் கொள்கைகளை எல்லாம் சேர்த்துக் கொண்டு தம்முடைய மனப்பான்மையைத் திருத்திக் கொண்டு வருவதாகத்தான் தெரிகிறது. நம்முடைய தேசத்தை அவர்கள் மாற்றுகிறார்களா, அல்லது, அவர்களுடைய தேசம் மாறப்போகிறதா என்பது காலக்கிரமத்தில் நன்றாகத் தெரிந்து போகும். கடவுள் சிருஷ்டிக்கு எது பொருத்தமானதோ, அவருக்கு எது உகந்ததோ அது எப்படியும் நிலைத்து நிற்கும். எப்படிப்பட்ட மனிதர்களானாலும் அதை அழிக்க முடியாது. மனிதரை மனிதர் பணியாமல் ஒவ்வொருவரும் தன்னரசாய்