பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

மாயா விநோதப் பரதேசி

எஜமானத்துவம் வகித்தால், அவர்களைப் பணிவதற்கே மனிதர் இல்லாமல் போய்விடுவது நிச்சயம். அப்படிப்பட்ட நிலைமை கடவுளுக்கு விருப்பமானதாக இருந்தால், அதுவே ஏற்படட்டும். அந்தக் காலம் நம்முடைய தலைமுறையில் உண்டாகாதென்பது நிச்சயம். அதுவரையில் நான் நம்முடைய பெரியோர்களுடைய கொள்கைப்படியே நடந்து காலத்தைத் தள்ளிவிடுகிறேன். இனி வரும் பெண்ஜாதிகள் புருஷரோடு சமதையாக வெளியில் உத்தியோகம் பார்க்கட்டும். வீட்டிற்கு வந்தவுடன் இரண்டு பேரும் சேர்ந்து சமையல் செய்து சாப்பிடட்டும். அவரவர் தம் தம் வேலையைத் தாமே செய்து கொள்ளட்டும். அப்போது வேலைக் காரியும் தான் எஜமானியாய் இருக்க வேண்டும் என்று பிரியப்படுவாள். ஆகையால், எல்லோரும் தனித்தனியாகப் பிரிந்திருந்து எல்லோரும் எஜமானர், எல்லோரும் தமக்குத் தாமே வேலைக்காரர் என்று காரியங்களை நடத்திக் கொள்ளட்டும்” என்றாள்.

அதைக் கேட்ட கண்ணப்பா நிரம்பவும் குதுகலமாகச் சிரித்து, “பலே! பலே! பேஷ்! நீ சொல்வதைப் பார்த்தால், இனிமேல் வரும் பெண்ஜாதிகள் ‘குழந்தை குட்டிகளைப் பெற்று வளர்க்கும்படியான சிரமம் எங்களுக்கு மாத்திரம் ஏன் இருக்க வேண்டும்? அதையும் ஆண்பிள்ளைகளே செய்து கொள்ளட்டும்’ என்று சொல்லி அந்த விஷயத்திலும் சமத்துவம் பாராட்டுவார்கள் என்று நீ சொல்வாய் போலிருக்கிறதே” என்றான்.

வடிவாம்பாள், “ஆம். வாஸ்தவம்தான். இனி புருஷர்கள் அதையும்தான் செய்ய வேண்டும். எல்லோரும் சமத்துவம் பாராட்டி ஒருவரை ஒருவர் அண்டாமல் இருக்கையில், ஸ்திரீகள் பிள்ளைப் பேறு முதலிய துன்பங்களில் அகப்பட்டுக் கொண்டு வீட்டில் படுத்திருந்தால், அந்தக் காலத்தில் மாத்திரம் அவர்களை ரஷிப்பதான இழிதொழிலை புருஷர் ஏற்றுக் கொள்ளுவார்களா? மானமுள்ள ஸ்திரீயாக இருந்தால், அவள் எந்தக் காலத்திலும் எந்த விஷயத்திலும் புருஷருடைய உதவியை நாடாமலேயே இருக்க வேண்டும் அல்லவா. நீங்கள் சொல்வதும் சரியான விஷயமே. அப்படித்தான் நடக்கும்” என்றாள்.