பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

199

பூஜிதையை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவள் ஒரே உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டிருந்தவள் ஆதலால், அவளது மனம் கலியானத்தில் அவ்வளவாகச் செல்லவில்லை. ஆனால் அவள் பக்குவகாலம் அடைந்து சில ஆண்டுகள் சென்று விட்டமையால், அவளது தந்தை அவளது மனத்தை எப்படியாகிலும் சீக்கிரத்தில் முடித்துவிட எண்ணித் தமது எண்ணத்தை அவளிடம் வெளியிட, அவள் அதற்கு இணங்காமல் மேலும் சில வருஷகாலம் கழிந்த பிறகு கலியான விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்றும் கூறினாள். தந்தை அதை ஒப்புக் கொள்ளாமல் அவ்வளவு வயதிற்கு மேல் இந்திய மாதர் கலியாணம் இன்றி இருப்பது துஷணைக்கு இடமாகும் என்று கூறிப் பலவகையில் நற்புத்தி புகட்டியதன்றி, கந்தசாமி என்பவன் சகலமான அம்சங்களிலும் அவளுக்குத் தக்க கணவன் என்றும், மன்னார்குடி வேலாயுதம் பிள்ளை வீட்டாரின் சம்பந்தம் எப்படிப்பட்டவருக்கும் கிடைப்பது அரிது ஆகையால், அதைத் தாம் தள்ளக் கூடாதென்றும், பின்னால் அவ்வளவு ஏற்றமான சம்பந்தம் கிடைக்காது என்றும், ஆகையால் தாம் உடனே கலியானத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து அவளை நிரம்பவும் நயமாக வற்புறுத்தித் தமது கருத்திற்கு இணங்கும்படி செய்திருந்தார். அது முதல் அவளது மனதில் அடிக்கடி கந்தசாமி என்ற யெளவனப் புருஷனது நினைவு தோன்றவே, அவனே தனக்குக் கணவனாகப் போகிறான் என்ற எண்ணம் உண்டான போதெல்லாம், இன்னதென்று விவரிக்க இயலாத ஒருவித இன்ப ஊற்று அவளது மனதில் சுரக்கத் தொடங்கியது. அவன் கருப்பாய் இருப்பானோ, அல்லது, சிவப்பாய் இருப்பானோ, அழகாய் இருப்பானோ, அல்லது விகாரமாய் இருப்பானோ என்ற ஆயிரக்கணக்கான சந்தேகங்களும் கேள்விகளும் அவளது மனதில் பிறந்து, அவனைத் தான் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற விலக்க இயலாத ஒருவித வேட்கையை உண்டாக்கிக் கொண்டிருந்தன. ஆனாலும், அதைத் தனது தந்தையிடம் வெளியிட லஜ்ஜைப்பட்டுத் தனது படிப்பு மும்முரத்தில் அதன் பாதையை அவ்வளவாக உணராமல் இருந்து வந்தான். ஆனால், அவள் கலியாணம் செய்து