பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

மாயா விநோதப் பரதேசி

ஒரு மேஜையின் மீது வைத்தாள். ஆதலால், அவளது கவனமும் பார்வையும் அவ்விடத்தில் சென்றன. அதுவே சமயம் என்று நினைத்த கொடி முல்லையம்மாள் தான் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டுச் சிறிது அப்பால் நகர்ந்து கோபாலசாமியைப் பார்த்துத் தனது கையாலும் கண்களாலும் ஜாடை காட்டி, அவன் உடனே அவ்விடத்தை விட்டுக் கீழே போய் இருக்கவும், பட்டாபிராம பிள்ளை வந்தால், அவரை மேலே அனுப்பாமல், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் வேலைக்காரியைத் தன்னிடம் அனுப்பவும், தான் கீழே வருவதாகவும், உடனே புறப்பட்டுப் போகலாம் என்றும் அவனிடம் தெரிவித்தாள். கோபாலசாமி உடனே அதை உணர்ந்து கொண்டவனாய், உரத்த குரலில் மனோன்மணிக்குக் கேட்கும்படி பேசத் தொடங்கி, “சரி; மனோன்மணியம்மாளுடைய தகப்பனாரைப் பார்க்கக் கிடைக்க வில்லையே என்று நான் நினைத்தேன். நல்ல வேளையாக அவர்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் வரப்போகிறார்கள். நாம் அதுவரையில் இருந்து அவர்களையும் பார்த்துக் கொண்டு போகலாம். நாம் உடனே திரும்பிப் போய்விடலாம் என்ற எண்ணத்துடன் குதிரையை வண்டியில் கட்டியபடி நிறுத்தி வைக்கச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். ஆகையால் நான் கீழே போய்க் குதிரையை அவிழ்த்துவிடச் செய்துவிட்டு நான் கீழேயே இருக்கிறேன். மனோன்மணியம்மாள் பலகாரம் சாப்பிடட்டும். நீ அவர்களோடு பேசிக் கொண்டிரு. நான் இருந்தால், மனோன்மணியம்மாளுக்குக் கூச்சமாக இருக்கும்” என்று கூறினான்.

கொடி முல்லையம்மாள், “சரி; அப்படியே செய்யுங்கள்” என்றாள்.

உடனே கோபாலசாமி எழுந்து வேலைக்காரப் பெண்ணையும் கூட அழைத்துக் கொண்டு கீழே போய்விட்டான். காப்பி முதலியவற்றைக் கொணர்ந்து வைத்த மனோன்மணி அம்மாளுடைய வேலைக்காரியும் அவ்விடத்தை விட்டு அந்த விடுதியின் வாசலுக்குப் போய்விட்டாள். அவ்வாறு கொடிமுல்லை அம்மாளோடு தனியாக விடப்பட்ட மனோன்மணியம்மாள்