பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

மாயா விநோதப் பரதேசி

செய்கிறார்களா? அதையாவது நீங்கள் யோசிக்க வேண்டாமா?” என்று கூறிய வண்ணம் தனது இடது கையில் இருந்த பிஸ்கோத்தை வாயில் வைத்து இரண்டு மூன்று தரம் கடித்து மிகுதியை தட்டில் வைத்துவிட்டு, காப்பி இருந்த பாத்திரத்தை எடுத்து வாயில் வைத்து சப்பி ஒர் இழுப்பு இழுத்துவிட்டு மறுபடி வேறொரு பிஸ்கோத்தை எடுத்து முன்போல அதில் ஒரு பாகத்தைக் கடிக்கத் தொடங்கினாள்.

அவள் போஜனம் செய்த மாதிரி கொடி முல்லையம்மாளுக்கு அருவருப்பை உண்டாக்கியது. மனோன்மணி அம்மாளின் தகப்பனார் நல்ல மேலான ஜாதியில் பிறந்த தக்க பெரிய மனிதராக இருந்தும், தமது புதல்வி அப்படிப்பட்ட மிலேச்ச செய்கைகள் செய்ய இடங்கொடுத்து வந்திருக்கிறாரே என்ற நினைவு தோன்றியது. ஆனால், அவள் சாப்பிடும் போது தான் தனது அருவருப்பைக் காட்டுவது அநாகரிகம் என்று நினைத்துத் தனது மன நிலைமையை வெளியில் காட்டாமல் நிச்சலனமான முகத்தோற்றத்தோடு பேசத் தொடங்கி, “இங்கிலீஷ் காரருடைய பெருமை, நாணயம், திறமை முதலியவற்றைப் பற்றி நான் எவ்வித ஆட்சேபனையும் சொல்லவில்லை. ஆனால், உங்களைப் போன்றவர்கள் அவர்களுடைய சங்கதிகளை மாத்திரம் தெரிந்து கொண்டு நம்முடைய நாட்டின் சங்கதிகளைக் கொஞ்சமும் தெரிந்து கொள்ளாமல் நம்மவரிடம் பெருமை, நாணயம், திறமை முதலியவை இல்லை என்று மதிப்பதைத் தான் நான் பலமாக ஆட்சேபிக்கிறேன். நம்மிடம் அப்படிப்பட்ட சிறப்புகள் இருந்தால், இரண்டாயிரம் மைல் துரத்துக்கு அப்பால் உள்ள ஒரு சிறிய தேசத்தார் இவ்வளவு தூரம் வந்து நம்மை எல்லாம் அடக்கி ஆள எப்படி சாத்தியப்பட்டது என்றும், சொற்ப மனிதரான அவர்களை ஒட்டிவிட நம்மவரால் முடியவில்லையே என்றும் நீங்கள் சொல்லுகிறீர்கள். இதற்கு நான் ஒரே ஒரு சிறிய திருஷ்டாந்தம் சொல்லுகிறேன். ஒரு கிராமத்தில் பதினாயிரம் ஜனங்கள் இருக்கிறார்கள். இரவில் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிற சமயத்தில் சுமார் பத்து முரடர்கள் திடீரென்று தோன்றி வீட்டிற்குள் புகுந்து ஜனங்களை அடித்து பயமுறுத்தி எல்லாச் சொத்துகளையும் அள்ளிக்கொண்டு போய் விடுகிறார்கள்.