பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

மாயா விநோதப் பரதேசி

இருந்து இன்னொரு கோடிக்கு ஒரு மணியில் தந்தி போய்விடும். சிப்பாயிகள் துப்பாக்கிகளோடும் வெடி குண்டுகளோடும் ரயிலில் உடனே வந்துவிடுவார்கள். இதுவுமன்றி, இந்தியாவில் மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களில் உள்ள விளைப்பொருள் சுலபத்தில் வெளியேற்றப்படுவதற்கும், வெளிநாட்டுச் சரக்குகள் அக்கிராமங்களுக்கு பரவுவதற்கும் அனுகூலமாகவும் ரயில் அமைந்திருக்கின்றன. ரயில், தந்தி, தபால், ராணுவம் முதலியவைகளே நம்மை அடக்கியாளும் ஜீவாதாரக் கருவிகள். ஆனால் ரயில், தபால், தந்தி முதலியவை ஜனங்களுக்காக ஏற்படுத்தப் பட்டவை என்பது வெளிப்படையான கருத்து. ஏனெனில் அவை நடத்துவதற்குத் தேவையான திரவியம் வேண்டும் அல்லவா. அவைகளை ஜனங்களிடத்தில் இருந்தே வசூலித்துக் கொள்ள வேண்டும் என்பது கருத்து. இது நிற்க, அவர்களுடைய பாஷையை ஜனங்களிடத்திலும் பரப்பிவிட்டால், தங்களுடைய வேலை சுலபமாக நடைபெறும்; தங்களுடைய காளியாலயங்களில் நம்முடைய ஜனங்களே இருந்து சில்லரை வேலைகளை எல்லாம் பார்ப்பர். அவைகளுக்கு எல்லாம் சீமையில் இருந்து மனிதரைக் கொண்டு வருவதென்றால் அது சாத்தியமானதல்ல. இப்படி இங்கிலிஷ்காரர்கள் மீன் பிடிப்பதில் இருந்து ஆரம்பித்து உலகத்தையே பிடித்து ஆளும் வரையில் வந்திருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்திருக்கும் யந்திரங்கள் எல்லாம் அவர்களுடைய கொள்ளைத் தொழிலுக்கு அவசியமானவையாகத் தோன்றித் தோன்றி ஆழ்ந்த யோசனையின் மேல் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. நம்மவர்களுக்கு அவைகள் அவசியமே இல்லை. நம்மவர்கள் இந்த உலகப்பற்றை அதிகமாக நாடாதவர்கள்; உலக ஆசையைக் குறைத்து கடவுள் கடவுள் என்று தியானம் செய்திருப்பவர்கள். நம்மவர்களுக்குக் கடவுளை அடைவதே பிரதானம். இங்கிலீஷ்காரருக்கும் ஒரு கடவுள் இருக்கிறார். கடவுள் என்ற பதத்தைக்கூட அவர்கள் நம்மிடம் இருந்து தெரிந்து கொண்டார்கள் என்பது, அவர்கள் கடவுளுக்கு காட் (God) என்று பெயர் கொடுத்திருப்பதில் இருந்தே நிச்சய மாகிறது. நம்முடைய தேசத்தில் திருடர்கள் கொள்ளைக்குப் புறப்படும் முன் மதுரை வீரன் முதலிய தெய்வங்களுக்கு ஆடு