பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

249

ரத்தாகிறதே இல்லை. புருஷன் மாண்ட பிறகு, அவனது விதவை மறுகலியாணம் செய்கிறதே வழக்கமில்லை. ஏனெனில் ஒருவனுக்கு மனைவியாய் இருந்து மனம் தேகம் முதலியவற்றில் களங்கம் அடைந்து கழிபட்டுப்போன ஒரு ஸ்திரியைப் போய்க் கலியாணம் செய்து கொள்வது கேவலம் இழிவான மோகத்தைக் காட்டும் என்றும் நிஷ்களங்கமான மனமும், தேகமுமுடைய ஸ்திரியை மணந்து, இருமனமும் ஒன்றுபடுவதே உண்மையான இல்லற வாழ்க்கை என்றும் நம்மவர் கருதுகிறார்கள். நம்மவரின் ஏற்பாடுகளும் வெள்ளைக்காரருடைய ஏற்பாடுகளும் முற்றிலும் விரோதமானவையாக இருக்கின்றன. நீங்கள் மற்ற சகலமான விஷயங்களிலும் வெள்ளைக்காரருடைய போக்கை அனுசரிப்பவராக இருந்தும், உங்கள் கலியான விஷயத்தில் மாத்திரம் அவர்களுடைய நடத்தைப்படி செய்யவில்லையே என்ற இன்னொரு சந்தேகம் உதிக்கிறது. நீங்கள் கந்தசாமியைக் கண்ணால்கூடப் பார்த்ததில்லை. அவன் கருப்பாய் இருப்பானோ விகாரமாய் இருப்பானோ என்ற சந்தேகங்கூட உங்களுக்கு உண்டாகவில்லை. அப்படி இருக்க, நீங்கள் உங்களுடைய தகப்பனாருடைய பேச்சை மாத்திரம் கேட்டுக் கொண்டு இதற்கு எப்படி இணங்கினிகள்? கந்தசாமி என்ற பையனோ உங்களைப் போல இங்கிலீஷ் படித்து, பி.ஏ. பரீட்சையில் தேறி இருக்கிறவன் ஆனாலும், அவன் சகலமான விஷயங்களிலும் நம்முடைய தேசத்துப் பழக்க வழக்கங்களையே கடைப்பிடித்து நடக்கிறவன். அவன் தனக்கு வரும் சம்சாரம் தனக்கும் தன் பெற்றோர் பெரியோருக்கும் கீழ்ப்படிந்து அடங்கி நடக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவன். குடும்ப ஸ்திரீகளுக்கு பி.ஏ. முதலிய பட்டங்கள் அவசியமில்லை என்றும், அவர்கள் எவ்வளவுதான் படிப்பாளியாகவோ, புத்திசாலியாகவோ இருந்தாலும், அவர்கள் அடக்கம், பணிவு, உழைப்பு, மிருதுவான சம்பாஷணை, படி தாண்டாமை, கற்பு முதலிய சிறந்த குணங்களால் பூஜிதை பெற வேண்டுமே அன்றி இங்கிலீஷ் புஸ்தகத்தைப் படித்து விட்டோம் என்ற நினைவினாலேயே புருஷருக்குச் சமமாகவோ அவரை மீறியோ நடப்பது தவறு என்பதும் அவனுடைய எண்ணம். வெள்ளைக்