பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

மாயா விநோதப் பரதேசி

மனிதருடைய உடம்பில் எந்த இடத்தில் விஷம் திண்டினாலும், திண்டி இரண்டொரு நாழிகைக்காலம் கழிந்திருந்தாலும், அந்த விஷத்தை நிவர்த்திக்கத்தக்க வைத்தியமாக இருக்க வேண்டும். அது இங்கிலிஷ் வைத்தியரால் முடியாத காரியம். அவர்களுடைய வைத்தியம் நிரம்பவும் படாடோபமானது; வீண் செலவு பிடிக்கக்கூடியது. குணம் உண்டாக்குவதிலோ முழுப்பூஜ்யமானது. உடம்பில் ஒரு கட்டி உண்டாயிருந்தால், அதை அறுத்து குணப்படுத்த மாதம் ஒன்றாகும். அதற்கு ரூ 200 செலவு பிடிக்கும். ஒரு பைசாகூடச் செலவில்லாத ஒரு மூலிகையைக் கொண்டு நாம் இரண்டே நாளில் கட்டியைப் பழுக்க வைத்து, உடையச் செய்து ஆற்றிவிடலாம்” என்றான்.

இன்னொருவன், “ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்? சர்வ சாதாரணமான ஒரு விக்கலை எடுத்துக் கொள்ளுவோம். நம்முடைய இங்கிலீஷ் வைத்தியர் ஒர் அற்ப விக்கலை நிறுத்துவாரா, முதலில் சொல்லட்டும். அதன் பிறகு அவர் பாம்பு கடிக்கு மருந்து கொடுக்கட்டும்” என்றார். அதைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர், “அடே! ஏன் ஐயா வீணாக அளக்கிறீர்? நீங்கள் இங்கிலீஷ் வைத்தியர்களை மாத்திரம் துரவிக்கிறீர்களே. உங்களிடத்தில் மாத்திரம் விக்கலுக்கு என்ன மருந்திருக்கிறது? விக்கல் கொண்டவன் அவஸ்தைப்பட்டுத்தான் தீரவேண்டி இருக்கிறது. அல்லது கொஞ்சம் தண்ணீர் குடித்தால் கொஞ்ச நேரத்தில் அது நின்று போகிறது” என்றார்.

முன் பேசியவன் புரளியாக நகைத்து, “விக்கலென்றால், பல திணிசு விக்கல்கள் இருக்கின்றன. அவைகளை எல்லாம் நம்மவர்கள் கண்டுபிடித்து எழுதி இருக்கிறார்கள். சிலருக்கு விக்கல் வந்தால், அது ஒரு வாரம் வரையில் போகாமல் இருந்து ஆளைக் கூடக் கொன்று விடும். அது நிரம்பவும் அபாயகரமான வியாதி: அப்படிப்பட்ட வியாதி ஒன்று இருப்பதாக இங்கிலீஷ் வைத்தியர் களுக்குத் தெரியவே தெரியாது. இந்தச் சாதாரணமான அற்ப விக்கலைப் போக்கவே அவர்களால் முடியாத போது பெரிய விக்கல்களுக்கு, என்ன மருந்தைக் கொடுக்கப் போகிறார்கள்” என்றான்.