பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

283

வித அபிமானங்கள் தோன்றுகின்றனவே. இந்த அபிமானங்களை எல்லாம், உலகைத் துறந்த தபசிகள் கூட முற்றிலும் விலக்க முடிகிறதில்லையே. எங்களுக்கும், இந்த உலகத்தில் உள்ள சிஷ்டர்களுக்கும் எவ்வளவோ அருமையானதும் விலை மதிப்பற்றதுமான தங்களுடைய உயிரைத் தாங்கள் இவ்வளவு அசட்டையாக மதித்து, பாம்பின் விஷத்தை விலக்கத்தக்க மருந்தை உண்ணாமல் இப்படி இருப்பது நியாயம் ஆகுமா? இப்போது தாங்கள் நன்றாகப் பேசியதில் இருந்து பாம்பின் விஷம் மெதுவாகவே உடம்பில் உறைக்கும் போலத் தோன்றுகிறது. ஆகையால் இப்போது கூட நாம் வைத்தியர்களை அழைத்து வந்து மருந்துகள் கொடுக்கச் செய்து தங்களுடைய உயிருக்கு ஹானி ஏற்படாமல் தடுத்துவிடலாம். தயை செய்து தாங்கள் அனுமதி கொடுங்கள். உடனே தக்க வைத்தியரை வரவழைக்கிறோம். இதோ தாங்கள் பங்களாவின் வாசலில் பதினாயிரக் கணக்கில் ஜனங்கள் வந்து தங்களைத் தரிசிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுள் இந்தப் பாம்பு கடிக்கு மருந்துகள் தெரிந்த பல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டே தக்க சிகிச்சை செய்யலாம். தாங்கள் பங்களா வாசலைப் பார்த்தால் இத்தனை ஆயிரம் ஜனங்களும் தங்களுடைய உயிரை எவ்வளவு விசேஷமாக மதித்திருக்கிறார்கள் என்பது ஸ்பஷ்டமாக உடனே விளங்கிப் போகும். தங்களைப் போன்ற பெருத்த பரோபகாரிகளின் உயிர் பொதுவாக சகலருக்கும் உரியதான ஒரு நிதிக் குவியல் என்றே மதிக்க வேண்டும். அதைத் தாங்கள் இப்படி அசட்டை செய்திருப்பது கொஞ்சமும் தர்மமல்ல. தயை செய்து அனுமதி கொடுங்கள். உடனே மருந்துகள் கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.” என்றாள்.

அவளைத் தொடர்ந்து கண்ணப்பா நிரம்பவும் அடக்கமாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, “சுவாமிகளே! தங்களுக்குத் தெரியாத நியாயம் ஒன்றுமில்லை. தங்களை உயிர்த்தெய்வமாக மதித்துள்ள நாங்களும் இத்தனை ஆயிரம் ஜனங்களும் துயரக் கடலில் ஆழ்ந்து மனமாழ்கிக் கிடக்கவும், நம்முடைய பகைவர்களும், மற்றுமுள்ள துஷ்டர்களும், துன்மார்க்கர்களும்