பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

283

மற்றவைகளைவிட சிரேஷ்டமானவன் என்றும் நினைத்துக் கொண்டிருப்பதல்லாமல், இன்னம் குறுகிய நோக்கங்கொண்டு, தான் தன் பெண்ஜாதி பிள்ளைகள், தன் உறவினர் ஆகிய சிலரைத் தவிர மற்ற ஜனங்கள் எல்லோரும் தனக்குச் சம்பந்தமற்றவர்கள் என்று நினைத்து, தனக்கென்று பிரத்தியேகமாகப் பொருள் தேட முயற்சிப்பதோடு, தனது ஆசாபாசங்களையும் மேற்படி சொற்ப மனிதர் வரையில் குறுக்கிக் கொள்கிறான். இதனால் உலகத்தில் பலவகைப்பட்ட குரோதங்களும், பகைமையும், மோசங்களும், துஷ்டத்தனங்களும், துஷ்கிருத்தி யங்களும் நிறைந்து, இந்த பூலோகமே ஒரு நரகம்போலக் காணப்படுகிறது. இந்த உலக சிருஷ்டியே ஒரு பெருத்த குடும்பம் என்பதையும், அதில் உள்ள ஒவ்வொரு அணுவும் கடவுளுடைய அம்சம் வாய்ந்த சமமான வஸ்து என்பதையும், ஒர் அணுவுக்கும், மற்றொன்றுக்கும் யாதொரு பேதமும் இல்லை என்பதையும், ஒன்றுக்கொன்று விலக்க முடியாத சம்பந்தமுடையது என்பதையும், எதுவும் அழிகிறதில்லை என்பதையும், இறப்பதெல்லாம் மறுபடி பிறக்கிறது அல்லது பரமாத்மாவிடம் ஐக்கியப்பட்டுப் போகிறது என்பதையும் மனிதன் உணர்ந்து விடும் பட்சத்தில் இந்த உலகத்தில் துக்கம் என்பதே இருக்காது. ஒரு மனிதன் தன் குழந்தை இறந்து போவதைப் பற்றி அபாரமாக விசனப்படுகிறான். தன் பக்கத்து வீட்டுக்காரனுடைய குழந்தை இறந்து போனால், அவனுக்கு அவ்வளவு அதிகமாக விசனம் உண்டாவதில்லை. இரண்டொரு அனுதாப மொழிகளோடு அந்த விசனம் தீர்ந்து போகிறது. இன்னம், அடுத்த ஊரில் உள்ள மனிதர்களுடைய குழந்தைகள் இறந்து போனால், இந்த ஊரில் இருப்பவனுடைய மனசில் அது உறைக்கிறதே இல்லை. மனிதருக்கு மனிதர் அப்படி இருக்கிறது. இன்னும் மிருக பட்சிகளை எடுத்துக் கொண்டால், அவற்றைக் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்ணலாம் என்ற பெருத்த சந்தோஷத்தை மனிதன் கொள்ளுகிறான். இப்படித் தன்னுடையது பிறருடையது என்ற வேற்றுமை மனிதன் தன்னுடைய குறுகிய திருஷ்டியினாலும் சூனிய அறிவினாலும் உண்டாக்கிக் கொண்டு துன்பங்களையும் துயரங்களையும் சண்டை சச்சரவுகளையும் பெருக்கிக் கொண்டே போவதனால் தான் இது சகிக்க முடியாத துன்ப உலகமாகத் தோன்றுகிறது.

மா.வி.ப.I-20