பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

309

நம்புவார்கள் நான் நான்கு நாகப் பாம்புகளால் கடிக்கப்பட்டு நோயாளியாகப் படுத்திருக்கிறேன் என்று பல நாட்கள் வரையில் சொல்லிக் கொண்டு வந்தால், அதை எதிரிகள் உண்மை என்றே நம்பமாட்டார்கள். என்னைக் கடிக்கவில்லை என்றும், நான் தப்பித்துக் கொண்டு ஏதோ கபடமான கருத்தோடு பாசாங்கு செய்கிறேன் என்றும் எதிரிகள் உடனே கண்டு கொள்வார்கள் ஆகையால், அப்படிச் செய்வது சரியல்ல. என்னைப் பாம்புகள் கடித்துவிட்டதாகவும், நான் ஒரே மயக்கமாய்க் கிடப்பதாகவும், சில மாந்திரீகர்களும், வைத்தியர்களும் உள்ளே இருந்து என்க்கு சிகிச்சை செய்து கொண்டிருப்பதாகவும் ஜனங்களும் போலீசாரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அப்படியே அவர்கள் இன்று சாயுங்காலம் வரையில் சொல்லிக் கொண்டிருக்கட்டும். நான் இருக்கும் இந்த இடத்திற்கு யாரும் வரமாட்டார்கள். இன்று சாயுங்காலம் நீங்கள் ஏதோ அலுவலாய்ப் போவது போல வெளியில் போங்கள். அப்போது ஜனங்கள் என்னுடைய தேக ஸ்திதி எப்படி இருக்கிறதென்று கேட்பார்கள். வைத்தியர்கள் மருந்துகள் கொடுத்த பிறகு நான் பலமாக வாந்தி எடுத்ததாகவும், மயக்கம் கொஞ்சம் தெளிந்திருப்பதாகவும், இன்றைய இரவுக்குள் முற்றிலும் குணம் ஏற்பட்டுவிடும் என்று நான் நம்புவதாகவும் சொல்லுங்கள். அதோ எல்லா ஜனங்களுக்கு நான் என்னுடைய நன்றியறிதலைத் தெரிவிக்கச் சொன்னதாகவும், அவர்கள் எல்லோரும் கவலைப்படாமல் தத்தம் வீட்டுக்குப் போய் இராப்பொழுதைக் கழிக்கவும், நான் கேட்டுக் கொண்டதாக நீங்கள் சொல்லுங்கள். பிறகு நீங்கள் உள்ளே வந்திருந்து கொஞ்சம் பொறுத்து மறுபடி வெளியில் போய், என்னுடைய நிலைமை முன்னிலும் அதிக தெளிவு அடைந்திருப்பதாகவும், போலீஸ்காரர்கள் எல்லோரும் தத்தம் வீடுகளுக்குப் போய்விட்டு மறுநாள் காலையில் இங்கே வரவும் நான் சொன்னதாகச் சொல்லுங்கள். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவேளை என்னோடு பேசப் பிரியப்பட்டால் அவரை உள்ளே அழைத்துக் கொண்டு வாருங்கள். நான் அவரோடு இரண்டொரு வார்த்தைகள் பேசி, அனுப்பி விடுகிறேன். அவர்கள் எல்லோரையும் அனுப்பிய பிறகு நீங்கள் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போய் உங்களுடைய தாயார் தகப்பனார் குழந்தை