பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

மாயா விநோதப் பரதேசி

வடிவாம்பாளுடைய தாயார் தகப்பனார் இன்னும் நாலைந்து ஆள்கள் ஆகிய ஜனங்களை ரகசியமாக அழைத்துக் கொண்டு வந்துவிடுங்கள். அப்படி வருவதற்கு முன், ஒர் ஆளைச் சுடுகாட்டுக்கு அனுப்பி, நல்ல விறகாய்ப் பார்த்து ஒரு வண்டியும், எரு முட்டைகள் நாலைந்து கோட்டையும் கொண்டுவந்து ஒரு ஜதை அடுக்கி வைக்கச் சொல்லிவிட்டு, வரும்போது ஒரு டின் சீமை எண்ணெய் மாத்திரம் வாங்கிக் கொண்டு வந்துவிடுங்கள். அதற்குள் என் வேலைக்காரி முதலிய எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிடும்படி செய்கிறேன். நம்முடைய மனிதர்கள் எல்லோரும் வந்து சேர்ந்த பிறகு நாம் ஒரு பாடைகட்டி வைத்துக் கொண்டு தயாராக இருப்போம். இரவு சரியாய் ஒருமனி சமயத்தில், ஊரெல்லாம் அடங்கி நிச்சப்தமாயிருக்கும் காலத்தில், அந்தப் பாடையில் நான் படுத்துக் கொள்ளுகிறேன். நீங்கள் எல்லோரும் என்னைத் துக்கிக் கொண்டு சந்தடி செய்யாமல் மயானத்துக்குப் போய் அங்கே அடுக்கப்பட்டிருக்கும் ஜதையில் என்னை வைத்து, சீமை எண்ணெயை ஊற்றிக் கொளுத்திவிட்டு வந்துவிடுங்கள். நாளைய தினம் காலையில் ஜனங்களும் போலீசாரும் வந்து விசாரித்தால், அவர்கள் போன அரை மணிக்கெல்லாம் நான் இறந்து போய்விட்டதாகவும், எல்லோரும் சேர்ந்து தூக்கிக்கொண்டு போய்க் கொளுத்தி விட்டதாகவும் சொல்லி விடுங்கள். நாளை முதல் எனக்குக் கல்நட்டு பதினாறாவது தினக் கருமாந்திரம் முதலிய உத்தரகிரியைகளையும் நடத்தி விடுங்கள் - என்றார்.

அவர் கூறியதைக் கேட்ட வடிவாம்பாள் கண்ணப்பா ஆகிய இருவரும் பெருத்த திகைப்பும் குழப்பமும் விசனமும் அடைந்து கலங்கிப் போயினர். உடனே வடிவாம்பாள் திகம்பரசாமியாரை நோக்கி, “என்ன சுவாமிகளே! தாங்கள் இதுவரையில் பேசியதை எல்லாம் உண்மை என்றல்லவா. நாங்கள் நினைத்தோம். தாங்கள் கடைசியில் வேடிக்கையாகப் பேசி முடித்து விட்டீர்களே! தாங்கள் சொன்னது கொஞ்சமாவது நடக்கக்கூடிய காரியமா? பாம்பின் விஷத்தினால் தங்கள் உயிருக்கு அபாயம் நேர்ந்துவிடப் போகிறதே என்று நாங்கள் எவ்வளவோ கவலைப்பட்டோமே? அப்படி இருக்க, தங்களை உயிரோடு நாங்களே கொல்லுவ தென்றால், அது ஆகக்கூடிய காரியமா?” என்றாள்.