பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மாயா விநோதப் பரதேசி

ஆகையினால் எல்லாக் காரியங்களையும் சுயேச்சையாக நடத்திக் கொண்டு வந்தான். அவன் தண்டனை அடைந்ததற்கு முன் உல்லாச புருஷனாய் நினைத்த இடத்திற்குப் போய்த் தலைகால் தெரியாது பணச் செலவு செய்து சந்தோஷமாகப் பொழுதைப் போக்கி வந்தது போல இப்போது நடந்து கொள்ளாமல் புது மனிதனாக மாறிப்போனவன் போலத் தோன்றினான். எவ்வளவோ மானமாகவும் பெருமையாகவும் கண்ணியமாகவும் இருந்து, எல்லோரது வணக்கத்தையும் மரியாதையையும் பெற்று வந்த தங்களுக்கு என்றைக்கும் மாறாத பெருத்த மானபங்கமும், பழிப்பும் ஏற்பட்டு விட்டதே என்ற ஆராத்துயரமாகிய பெருத்த சுமை அவனது மனதில் சதாகாலமும் ஒரு பெருத்த மலை போல அழுத்திக் கொண்டிருந்தது என்பதை அவனது குன்றிய முகத்தோற்றமே எளிதில் புலப்படுத்தியது. அவன் சிறைச் சாலைக்குள் இருந்த காலத்தில் அந்த அவமானத்தையும் இழிவையும் அவ்வளவாக உணரவில்லை. அவ்விடத்தை விட்டுத் தனது சொந்த ஊர்ச் சனங்களின் இடையில் வந்த பிறகே, அவன் தனது சிறுமையையும் மானக்கேட்டையும் நன்றாக உணர்ந்தான். அவன் பகற்பொழுதில் தனது மாளிகையை விட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருந்தான். திரும்பிவந்த பிறகு சுமார் ஒரு மாத காலம் வரையில் அவன் தனது சொந்த வேலைக்காரர்களினது முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கும் வெட்கினான். அவ்வாறு இரண்டு மாத காலம் கழிந்தது. அந்தக் காலத்தில் அவன் எப்போதும் ஏகாந்தமாகவே இருந்திருந்து தனது நெஞ்சோடு சதாகாலமும் சம்பாஷணை புரிந்து வந்தான் ஆகையால், அவன் தங்களது பழைய பெருமையையும் உன்னத நிலைமையையும் இப்போதைய பாழடைந்து மழுங்கிப் போன நிலைமையையும் ஒத்திட்டுப் பார்க்கப் பார்க்க, அவனது விசனமும் வேதனையும் மலை போலப் பெருகிக் கொண்டே போயின. தங்களுக்கு அத்தகைய மீளாத பெருத்த தீங்கையும் மானக்கேட்டையும் இழைத்தவர்களான திகம்பரசாமியார் முதலிய தங்களது பகைவர்களுக் கெல்லாம் தான் ஒன்றுக்குப் பத்தான பெரும் பொல்லாங் கிழைத்துப் பழி தீர்த்து எல்லோரையும் வேறுத்து விட்டுத்தான், மறுவேலை பார்ப்பது என்ற உறுதி