பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

மாயா விநோதப் பரதேதி


மாசிலாமணி:- நீங்கள் இன்றைய தினம் ரயிலில் ஏறிவிட்டீர்கள், என்ற சங்கதியை வண்டிக்காரன் வந்து சொல்வான் அல்லவா. உடனே நான் நம்முடைய வேலைக்காரியை இந்தப் போடு மனோன்மணியிடம் அனுப்பி, முகூர்த்த காலம் வந்துவிட்டது ஆகையால், நான் வரப் போகிறேன் என்று சொல்லி எச்சரிக்கைப் படுத்தி விட்டு கால் நாழிகைக்குப் பிறகு நான் உள்ளே போய்ச் சேருகிறேன். மற்ற விஷயங்களை எல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி நடத்திக் கொள்ளுகிறேன். நீர் புறப்பட்டுப் போம். உங்களுடைய செலவுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு போம் -- என்றான்.

உடனே இடும்பன் சேர்வைகாரன் தனக்குத் தேவையான பணத்தையும் மாசிலாமணியின் விடையையும் பெற்றுக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டான். அதன் பிறகு அரை நாழிகை காலம் கழிந்தது. மாசிலாமணி எதிர்பார்த்ததற்கு இணங்க, போலீஸ் ஜெவான்கள் அவனை ஆஜர் பார்ப்பதற்காக வந்து, ஒரு புஸ்தகத்தில் அவனிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு, அவ்விடத்தை விட்டுச் சென்றனர். உடனே மாசிலாமணி உயர்வான ஆடை ஆபரணங்களால் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு அத்தர், ஜவ்வாது முதலிய பரிமள வஸ்துக் களைத் தனது உடம்பிலும் ஆடைகளிலும் பூசிக்கொண்டு தனது ஆசைநாயகியான ரமாமணியிடம் போகப் புறப்பட்டான். அதே தெருவில், அவனது மாளிகைக்கு நேர் எதிரில் இருந்த பெரிய மெத்தை வீட்டிலேயே அவளை வைத்திருந்தான். ஆகையால், அவன் அதிக தூரம் போக வேண்டிய அவசியம் இல்லாது இருந்தது. அவன் தனது மாளிகையின் வாசலை விட்டுக் கீழே இறங்கி சுமார் முப்பது கஜ அகலமுள்ள வீதியைக் கடந்து நேராக எதிரே சென்று ரமாமணியின் வீட்டு வாசலை அடைந்தான். அந்த வீட்டின் முன் புறம் இரும்புக்கிராதிகள் போடப் பெற்றிருந்தது. அவைகளின் உள்ளே இருந்த திண்ணையின் மேல் உட்கார்ந்து, நூல் வலைப் பின்னிக் கொண்டிருந்த போயி ஒருவன் உடனே ஓடிவந்து கிராதிக் கதவைத் திறந்து விட்டு, "தேவரா! தெண்டம் ஒஸ்துந்தி" என்று தெலுங்கு பாஷையில் அவருக்கு வணக்கம் கூறிக் கையெடுத்துக் கும்பிடு போட்டான்.