பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

மாயா விநோதப் பரதேதி

முன்தானே எல்லோருக்கும் வந்தது. வந்திருப்பவள் மனோன்மணியல்ல என்பதை நீ எப்படி அரைநாழிகைக்கு முன் தெரிந்து கொண்டாயோ, அதுபோலவே, நாங்களும் இப்போது தான் தெரிந்து கொண்டோம். இடும்பன் சேர்வைகாரன் வேண்டும் என்றே மனோன்மணியை விட்டு, இவளைக் கொண்டு வந்தான் என்று நீ சொல்வது தவறான விஷயம். நம்முடைய ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக, நாம் மனோன்மணியைக் கொண்டுவரத் தீர்மானித்தோம் என்பது இடும்பன் சேர்வைகாரனுக்குத் தெரியாதா? அதுவுமன்றி, நான் உன்னைத் தவிர வேறே எப்படிப்பட்ட பெண்ணின் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கக் கூடியவனல்ல என்பதுதான் சேர்வைகாரனுக்குத் தெரியாதா? இது வரையில் அவன் எனக்காவது, வேறே யாருக்காவது இப்படிப்பட்ட தரகு வேலை செய்தவன் என்பதை நீ கண்டாயா? எவ்வித ஏதுவும் இல்லாமல், நீ பைத்தியம் கொண்டவள் போலத் தாறுமாறாக உளறுகிறாயே! வத்திருப்பவள் மனோன்மணியல்ல என்பதை நாங்களும் இப்போதுதான் தெரிந்து கொண்டோம். அது விஷயமாக நாம் மேலே என்ன செய்வதென்பதைப் பற்றி நானும் சேர்வைகாரரும் இப்போதுதான் கலந்து பேசி ஒரு முடிவிற்கு வந்தோம். அது விஷயமாக உன்னோடு பேசவே நான் இப்போது இங்கே வந்தேன். அப்படி இருக்க, நீ பெண் பிள்ளைகளின் பைத்தியக்கார நினைவையே காட்டுகிறாயே!" என்றான்.

அப்போது ரமாமணி துரத்திலேயே நின்றபடி மறுபடியும் ஆத்திரமாகப் பேசத் தொடங்கி, "இதெல்லாம் யாரை ஏமாற்றுகிற வித்தை! இடும்பன் சேர்வைகாரன் உண்மையைத் தெரிந்து கொள்ளாமலே இவளைக் கொண்டு வந்தான் என்றே வைத்துக் கொள்வோம். அந்தப் பட்டாபிராம பிள்ளை மன்னார்குடியில் இருந்த காலத்தில், தம்முடைய பெண் மனோன்மணியை உங்களுக்குக் கட்டிக் கொடுக்க உத்தேசித்ததாக நீங்கள் என்னிடம் சொன்னதை நான் மறந்து விட்டேன் என்று நினைத்துக் கொண்டீர்களா? அவ்வளவு தூரம் உங்களுக்குள் கலியாணப் பேச்சு நடந்திருக்கிறது. நீங்கள் பெண்ணைப் பார்க்காதிருப்பீர்