பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

127

களா? அவசியம் நீங்கள் இதற்கு முன் மனோன்மணியைப் பார்த்தே இருப்பீர்கள். அப்படி இருக்க, இப்போது வந்திருப்பவள் மனோன்மணியல்ல என்று நீங்கள் முதல் நாளிலேயே தெரிந்து கொண்டிருக்க மாட்டீர்களா? இந்த சமாசாரப் பத்திரிகையைப் பார்த்துத்தான் நீங்கள் இந்தத் தவறை அறிந்தீர்கள் என்பதை நான் ஒரு நாளும் நம்பமாட்டேன்" என்று கூறினாள்.

மாசிலாமணி, "அடே பைத்தியமே போ! நீ இன்னும் உன்னுடைய மூடத்தனத்தை விடாமலேயே பேசுகிறாயே! நான் அவளை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்று எத்தனையோ தடவை உன்னிடம் பிரஸ்தாபித்ததாக எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது. அதை மறந்து நீ பேசினால், நான் உன்னை எப்படித் திருப்தி செய்வேன்?" என்றான்.

அவ்வளவு தூரம் அவனோடு பேசிய பிறகு ரமாமணிக்கு பக்கிரியா பிள்ளையைப் பிரிந்த ஏக்கம் ஒருவாறு குறைந்தது. ஆகையால், தான் அதற்கு மேல் அதிகம் பிணங்கினால், மாசிலாமணிக்குக் கோபம் வந்துவிடும் என்று நினைத்தவளாய், அரை மனதோடு அவனண்டை நெருங்குகிறவள் போலத் தயங்கித் தயங்கி அவனுக்குப் பக்கத்தில் வந்து உராய்ந்து நின்றாள். ஆனாலும், தனது முகத்தை மாத்திரம் வேறு பக்கம் திருப்பியபடி, "ஆனால், இது தெரிந்தே செய்யப்பட்டதல்லவா? உண்மையிலேயே நீங்கள் இதற்கு முன் அவளைப் பார்த்ததில்லை என்று பிரமாணிக்கமாகச் சொல்லுவிர்களா?" என்று கொஞ்சலாகவும் சலுகையாகவும் கூறினாள்.

மாசிலாமணியும் நிரம்பவும் மனத்தாங்கல் அடைந்தவன் போலப் பேசத் தொடங்கி, "நான் சொன்னதை எல்லாம் நீ மறந்து கொண்டே போனால், அதற்காக எனக்குத் தண்டனையோ! நீ நினைத்துக் கொண்டால், முறுக்கிக் கொண்டு அப்பால் திரும்பிக் கொள்ளுகிறது. தொட்டதற்கெல்லாம் நான் பிரமாணிக்கம் செய்து, உன் குணக்கைத் தீர்க்க வேண்டும் போலிருக்கிறது. இருக்கட்டும். உன் இஷ்டப்படியே நான் பிரமாணிக்கமாகச் சொல்லுகிறேன். நான் மனோன்மணியையும் பார்த்ததில்லை; வேறே எந்த மணியையும் பார்த்ததில்லை" என்றான்.