பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

149

பிள்ளை காவல்காரர்கள் வேலைக்காரிகள் முதலிய எல்லோரையும் அடித்துக் கட்டிப் போட்டுவிட்டு மேன்மாடத்திற்குப் போய், அவ்விடத்தில் ஓர் அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த விருந்தாளிப் பெண்பிள்ளையான யெளவன ஸ்திரீயை விடுவித்துக் கொண்டு போய்விட்டார்களாம். அவர்கள் போன இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு உரிய எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. விருந்தாளியாக வந்தவர்கள் தம்மோடு கூட அழைத்து வந்த வேலைக்காரப் பெண் பிள்ளையும் காணப்படவில்லை. அவளையும் முரட்டு மனிதர்கள் அழைத்துக் கொண்டு போனார்களா என்பதும், அல்லது, இரவில் ஏற்பட்ட சந்தடியில், அவளே தப்பித்து வெளியில் ஓடிப்போய்விட்டாளா என்பதும் தெரியவில்லை. ஆனால் இதில் இன்னொரு முக்கிய சங்கதியும் நடந்திருக்கிறது. விருந்தாளியாக வந்த இருவருள் பெண்பிள்ளை மாத்திரம் விடுவிக்கப்பட்டாளே அன்றி, ஆண் பிள்ளையாகிய யெளவனப் புருஷன் இரவில் இருளில் நடந்த சச்சரவில், கலெக்டருடைய ஆள்களினாலோ, அல்லது, வந்த முரடர்களினாலோ பலமாக அடிபட்டு மயங்கி ஸ்மரணை தப்பிக் கீழே வீழ்ந்து கிடந்தார். அவர் இறந்து போய்விட்டதாகக் கருதி ஒரு வேளை, முரடர்கள் அவரைப் போட்டுவிட்டுப் போயிருக்கலாம் எனத் தோன்றுகிறது. காலையில் போலீசார் வந்து எல்லோருடைய கட்டுகளையும் அவிழ்த்து விட்டதன்றி, ஸ்மரணை தப்பிக் கிடந்த விருந்தாளி ஆண்பிள்ளையை வைத்திய சாலைக்கு எடுத்துப் போயிருக்கிறார்கள். அவருக்குப் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னம் அவர் பேசக்கூடிய நிலைமையை அடையவில்லை. அவர் அநேகமாய்ப் பிழைக்கமாட்டார் என்றே வைத்தியர்கள் சொல்லுகிறார்கள். அவர் வாயைத் திறந்து பேசி உண்மையை வெளியிட்டாலன்றி, இந்த அதிசயச் சம்பவத்தின் உள் ரகசியத்தைப் பற்றி, எந்தத் தகவலும் தெரியாமல் போய்விடும் என்றே எண்ண வேண்டியிருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கலெக்டருடைய பெண் ஒரு பிரத்யேகமான இடத்தில் சயனித்திருந்தமையால், யாதொரு துன்பமும் இன்றி அவள் தப்பினாள். இரவில் நடந்த சம்பவம்