பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

மாயா விநோதப் பரதேசி

பெண்வீட்டார் பிள்ளை வீட்டார் ஆகிய இரு வகுப்பாருடைய சம்மதமாகிய பசை இல்லாமல் புரோகிதர் மந்திரத்தை மாத்திரம் சொல்லித் தாலிகட்டச் செய்துவிட்டால், அது கலியாணம் ஆகி விடுமா? பெண் வீட்டாருடைய சம்மதமில்லாமல் பெண்ணுக்குத் தாலி கட்டுவதும், ஒரு கம்பத்திற்குத் தாலி கட்டுவதும் இரண்டும் ஒன்றுதான். ஆகவே, தாங்கள் செய்ய உத்தேசித்ததை நான் உண்மையான கலியாணமென்றே நினைக்கவில்லை. மனோன் மணியம்மாளைக் கொண்டுவந்து வைத்துக் கொண்டு தாங்கள் துரோகிருதமாகப் பெண்டாள உத்தேசித்தீர்கள் என்றே நான் எண்ணிக்கொண்டேன். தங்களுடைய வேலைக்காரி முதல் முதலில் என்னிடம் சொல்லிய வரலாற்றிலிருந்து, தங்களுடைய ஆள்கள் மனோன்மணியம்மாளை விட்டு என்னை ஆள் மாறாட்டமாக எடுத்துக் கொண்டுவந்து விட்டார்களென்பதை நான் உடனே உணர்ந்து கொண்டேனானாலும், நீங்கள் செய்ய உத்தேசித்தாக அவள் சொன்ன இந்த ஒருதலைக் கலியாணத்தை நான் நியாயமான கலியாணமென்றே மதிக்கவில்லையாகையால், தாங்கள் மனோன்மணியம்மாளைக் கொணர்ந்து வைத்துக் கொண்டு துரோகிருதமாகப் பெண்டாள உத்தேசிக்கிறீர்கள் என்ற நினைப்பே என் மனசில் உறுதியாகப்பட்டது. அவளைப் பெண்டாள விரும்பும் தாங்கள் அவளுக்குப் பிரதிநிதியாக வந்திருப்பவளான என்னையும் அதே கதிக்கு ஆளாக்குவது நிச்சயமென்று என் மனசில் பட்டதாகையால், நான் அதைப்பற்றி எவ்வித ஆட்சேபம் சொன்னாலும், அது உங்கள் காதிற்கு ஏற்காதென்றே நான் நினைத்துக் கொண்டேன். தாங்கள் செய்ததைக் கலியாணமென்ற மரியாதையான சொல்லினால் அவள் குறித்தாளானாலும், அதன் அர்த்தம் எனக்குத் துராகிருத சம்பந்தமென்றேபட்டது. ஆகையால் நான் முதலில் வேலைக் காரி இடத்திலும், பிறகு கலியாணச் சடங்கு நடந்த காலத்திலும் எவ்வித ஆட்சேபமும் சொல்லாமல் நடப்பது நடக்கட்டுமென்று பார்த்துக் கொண்டே இருந்தேன்.

மாசிலாமணி:- (முற்றிலும் பிரமிப்படைந்து) நீ சொல்லும் நியாயம் நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறதே! நான் அந்த மனோன்மணியம்மாளைக் கண்டு ஆசை கொண்டேன். அவளு