பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

மாயா விநோதப் பரதேசி

வியத்தையும், அவரால் கொடுக்கப்படும் சுகத்தையும் ஏற்றுக் கொள்ளுவார்களானால், அவர்கள் உத்தம ஜாதி ஸ்திரீகள் ஆகமாட்டார்கள். ஒரு தாசி கேவலம் பணத்தையும் சுகத்தையும் நாடி, இன்னானென்பது தெரியாத ஒரு மனிதனிடம் சம்பந்தம் கொள்வதற்கும் அதற்கும் கொஞ்சம் பேதமில்லை. ஒரு தாசி கூட தமது ஜென்ம விரோதியான ஒரு மனிதனையும் அவனால் கொடுக்கப்படும் பணத்தையும் சுகத்தையும் வெறுத்து உல்லங். கனம் செய்வாளே அன்றி, தன் கௌரவத்தையும் கண்ணியத்தையும் இழந்து விடமாட்டாள். ஆகையால், தாங்கள் சொல்லும் உவமானத்தின்படி காலக்கிரமத்தில் கணவனோடு இணங்கிப் போகும் ஸ்திரீயின் நிலைமை இழிவான ஒரு தாசியின் நிலை மையை விடத் தாழ்ந்ததென்றே கொள்ள வேண்டுமன்றி அதை சாஸ்திரப்படி மணந்து கொண்ட தர்மபத்தினியின் நிலைமையாகக் கொள்ளக்கூடாது.

மாசிலாமணி:- (முன்னிலும் அதிகரித்த வியப்பும், திகைப்பும் அடைந்து) அப்படியா! உத்தம ஜாதி ஸ்திரீயாக இருந்தால் அப்படியா நடந்து கொள்வாள்! ஒருவேளை அப்படி நடந்து கொள்வாளோ என்னவோ! நான் ஆண்பிள்ளைதானே; பெண் பிள்ளையாகிய உனக்குத்தான் ஸ்திரீகளின் மனப்போக்க நன்றாகத் தெரியும். அப்படியே இருக்கட்டும்! நான் செய்த சடங்கு சாஸ்திரப்படி நடத்தப்பட்ட கலியாணமே அல்லவென்று வைத்துக் கொள்வோம். இது துராகிருத சம்பந்தமாகவே இருக்கட்டும். உன்னுடைய அபிப்பிராயம் அது; என்னுடைய அபிப் பிராயம் அதுவல்ல. அது போனால் போகட்டும். நான் மனோன்மணியம்மாளைக் கண்டு அவள் மேல் ஆசைப்பட்டு, அவளைக் கட்டிக்கொள்ள எடுத்துக்கொண்டு வந்திருப்பதாக வேலைக்காரி சொன்னாளே. நீ இந்தச் சம்பந்தத்தை உண்மையான கலியாணமாகவோ, அல்லது, துராகிருத சம்பந்தமாகவோ நினைத்தாலும், நான் ஒருத்தியின்மேல் வைத்த ஆசையை உடனே விலக்கி, இதற்குமுன் பழகாத இன்னொரு புதிய மனுஷியிடம் அந்த ஆசையை வைக்கக்கூடிய மனிதனென்று நீ எப்படி யூகித்துக் கொண்டாய்? நான் கண்ட ஸ்திரீயிடத்திலும் பிரியம் கொள்ளக் கூடிய காமாதூரனென்று நீ நினைக்கலாமா?