பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

213

என்னை மடக்கினாயே. மற்றவர்கள் சாதாரணமான பெண்களைக் கட்டிக் கொள்வதால், அந்த மொழியின்படி கலியாணத்திற்கு முன் பொய் சொல்லுகிறார்கள். நான் கட்டிக் கொண்ட பெண், அபாரமான மூளையும் ஆண் தன்மையும் வாய்ந்த நூதனப் பெண் ஆகையால், அப்படிப்பட்ட பெருமைக்குப் பாத்திரமான நானும் மற்ற சாதாரண ஜனங்களைப் போல கலியாணத்திற்கு முன் தவறு செய்தால் அவர்களுக்கும் எனக்கும் என்ன பேதம் இருக்கப் போகிறது. மற்றவர்கள் கலியாணத்திற்கு முன் தவறுகள் செய்தால், நான் அதற்குப் பின்னால் செய்ததாகவே வைத்துக் கொள். தவறு முன்பின்னாக இருந்தாலும், விஷயம் கலியாண விஷயந்தானே. அது ஓர் ஆறுதல் அல்லவா? நான் செய்தது தவறாகவே இருக்கட்டும். நீயும் இன்னொரு மனிதனும் சேர்ந்து பட்டாபிராம பிள்ளையின் பங்களாவிற்குள் போய், மன்னார்குடி வேலாயுதம் பிள்ளையின் மைத்துனியும், மைத்துனி புருஷனும் வந்திருப்பதாய் அபாண்டமாய்ப் புளுகினீர்களே! அதை என்னவென்று சொல்லுகிறது! அது தவறல்ல, ஜெகஜாலப்புரட்டு. வேலாயுதம் பிள்ளைக்கு மைத்துனியே இல்லையே. அப்படி இருக்க, நீ அவருக்கு எப்படி மைத்துனி ஆனாய்? அதுவுமன்றி, நீ இப்போது என்னைக் கலியாணம் செய்து கொள்ள இணங்கி எவ்வித ஆட்சேபனையும் சொல்லாமல் மணையில் உட்கார்ந்து தாலி கட்டிக் கொண்டு இன்று சோபன அறைக்கு வந்திருப்பதைப் பார்த்தால், நீ இதற்கு முன் கலியாணச் சடங்கிற்கு இலக்காகாத கன்னிகாஸ்திரீ என்று அர்த்தம் ஆகிறது. அப்படி இருக்க, அன்றைய தினம் நீ இன்னொரு மனிதனை உன்னுடைய புருஷன் என்று சொல்லி அழைத்துக் கொண்டு போனாயே. அதுவும் நீ சொன்ன உத்தமஜாதி ஸ்திரீகளின் லட்சணங்களுள் ஒன்று தானா? நீ உண்மையிலேயே வேறொருவனுடைய சம்சாரமாய் இருந்து, இங்கே வந்த பிறகு, என் அபாரமான ஐசுவரியத்தைக் கண்டவுடன் இதற்கெல்லாம் எஜமானியாக வேண்டும் என்று எண்ணங் கொண்டு பழைய புருஷனைக் கைவிட்டு, என்னைக் கலியாணம் செய்து கொண்டு இங்கேயே இருந்துவிட நினைத்தாயா?

போலி மணப்பெண்:- நாங்கள் சென்னப்பட்டணத்தில் பட்டாபி ராம பிள்ளையின் பங்களாவில் தெரிவித்த தகவல்களை எல்லாம்