பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

237

மனிதர் இன்னொருவர் பாக்கி இருக்கிறார், அவர் வந்து ஏறிய பிற்பாடு பூட்டலாம் என்று சொல்லி விடுவோம். பக்கிரியா பிள்ளை வந்து ஏறியவுடனே பூட்டச் செய்வோம். ஸ்டேஷன் மாஸ்டர் எங்கே போகப்போகிறார். நம்முடைய வண்டிக்குப் பக்கத்திலே தான் இருப்பார். அதுவுமன்றி, பெட்டிகளை எடுத்து வைக்கிற அவசரத்திலும் ஜனக்கும்பலிலும் பக்கிரியா பிள்ளை நம்முடைய வண்டியில் ஏறுவதை இடும்பன் சேர்வைகாரன் கவனிக்கவே போகிறதில்லை. கவனித்தாலும், அது சந்தேகம் உண்டு பண்ண நியாயமில்லை. எத்தனையோ பேர் வருகிறார்கள், ஏறுகிறார்கள். அதைப் பற்றி யாரும் சந்தேகப்பட ஏதுவே இல்லை. பக்கிரியா பிள்ளைகூட அதிகமாய்த் தாமதம் செய்யாமல், நாம் ஏறிய பிறகு இரண்டொரு நிமிஷத்திற்கெல்லாம் வந்து ஏறிவிடும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்றார். அதைக் கேட்டு ரமாமணியம்மாள் முற்றிலும் திருப்தி அடைந்தாள்.

அந்தச் சமயத்தில் வண்டி சமீபத்தில் வந்துவிட்டதென்பதையும் ஜனங்கள் உள்ளே போகவேண்டும் என்பதையும் காட்டுவதற்காக மணி அடிக்கப்பட்டது. மூன்றாவது வகுப்பில் ஏராளமாகக் கூடியிருந்த ஜனங்கள் எல்லோரும் முட்டைகளையும் குழந்தை களையும் தூக்கிக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று அவசரப் பட்டு மோதியடித்து அலறிக் கூக்குரல் செய்து கொண்டு உள்ளே நுழைய ஆரம்பித்தனர். நமது ரமாமணியம்மாளும், அவளது தாய் தந்தையரும் முதல் வகுப்புப் பிரயாணிகள் உள்ளே போவதற்காக ஏற்படுத்தப் பட்டிருந்த பிரத்தியேகமான வாசலின் வழியாக உள்ளே சென்றார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் கையில் ஜண்டாக்களைப் பிடித்தபடி அங்கே வந்து ரமாமணியம்மாளை ஒரு தரம் பார்க்கவே, அவர் அப்படியே பிரமித்து மயங்கி திக்குதிசை தெரியாமல் நின்று விட்டார். இளஞ் சூரியனைப் பார்த்த கண்ணிற்குச் சர்வமும் சூரியமயமாகவே தோன்றுவது போல, ஸ்டேஷன் மாஸ்டர் எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும், அல்லது, கண்களை மூடிக்கொண்டாலும், ரமாமணியம்மாளின் இன்பவடிவமே அவரது அகக்கண்ணில் ஒட்டிக் கொண்டு நின்று அவரை இன்பமோ துன்பமோ என்று அறிய இயலாத ஒருவித நூதன வேதனையிற்படுத்தியது. ரயில் வந்திருப்பதையும், தாம்