பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

மாயா விநோதப் பரதேசி

செய்ய வேண்டிய கடமைகளையும் மறந்து போனவராய் ஸ்டேஷன் மாஸ்டர் தேன் குடித்த மந்தி போல அப்படியே பல் இளித்து அந்த மடவன்னத்தின் மீது வைத்த விழியை எடுக்காமல் ஸ்தம்பித்து நின்றார். அது போலவே, வண்டியில் ஏறவந்த ஜனங்களும் வண்டிக்குள் இருந்து கீழே இறங்கிய ஜனங்களும் ஒரே ஜோதிமயமாக நின்ற ரமாமணியம்மாளின் வசீகர சக்தியால் கவரப் பெற்று தம்மை முற்றிலும் மறந்து அப்படியப்படியே நின்றுவிட்டனர். அந்த வடிவழகிக்கு அருகில் நின்ற அவளது தந்தையைப் பார்த்த பின்னரே ஸ்டேஷன் மாஸ்டர் தமது உணர்வைப் பெற்று அவர்களிடம் நெருங்கி கரைகடந்த அன்பும் குழைவும் காண்பித்து எதிரில் இருந்த இரண்டாவது வகுப்பு வண்டியின் கதவை நிரம்பவும் பக்தி சிரத்தையோடு திறந்து விட்டு, "ஏறுங்கள்; வண்டிக்குள் யாருமில்லை. உள் பக்கத்தில் 6 மனிதர் உட்காருவதற்கு இடம் இருக்கிறது. இனி இதில் யாரும் வந்து ஏறாதபடி நான் தக்க ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

உடனே ரமாமணியம்மாள் நிரம்பவும் நாணம் அடைந்தவள் போலத் தனது உடம்பை நெளித்துத் தலையைக் கீழும் மேலு மாய் நிமிர்த்தியபடி நடந்து இரண்டாவது வகுப்பு வண்டிக்குள் ஏறிக் கொண்டாள். அவளுக்குப் பின்னால் அவளது தாய் தகப்பன்மாரும் ஏறி உள்ளே சென்றனர். அப்போது வெளியே சிறிது துரத்தில் ஜனங்களுக் கெதிரில் பதுங்கிப் பதுங்கி நின்று கொண்டிருந்த பக்கிரியா பிள்ளையைக் கண்ட ரமாமணியம்மாள் தனது முகத்தை வண்டிக்கு வெளியில் வைத்து அப்புறம் இப்புறம் பார்க்க, போயியும், இடும்பன் சேர்வைகாரனும் பெட்டிகளை எல்லாம் ஒரு வண்டிக்குள் வைத்து விட்டு தாமும் ஏறி உள்ளே போய்க் கதவை மூடிக்கொண்டது அவளுக்குத் தெரிந்தது. அவள் உடனே பக்கிரியாப் பிள்ளையைப் பார்த்துக் கண்ணடிக்க, அவன் உடனே விசையாக நடந்து வந்து அவள் இருந்த வண்டியில் ஏறத் தொடங்கினான். அந்த வண்டியை விட்டு அப்பால் போக மனம் அற்றவராய் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் பக்கிரியாப்பிள்ளை வந்து ஏறியதைக் கண்டு மிகுந்த கோபமும் ஆத்திரமும் அடைந்து, "ஒய்! யாரைய்யா அது? அந்த வண்டியில் ஏறவேண்டாம்; இது ரிசர்வ்