பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

மாயா விநோதப் பரதேசி

இல்லை. ஆகாயத்தில் பறக்கிற பட்சியைப் பிடிக்கிறதுதான் கடினமான காரியம்; பிடித்த பிறகு, அதை எப்படிப் பக்குவப் படுத்தி என்னவிதமாக உபயோகப்படுத்துகிறதென்பது ஓர் அரிய காரியமா. அது நம்முடைய இஷ்டத்தைப் பொறுத்ததான அற்ப விஷயம். அதைப்பற்றி இனி நீங்கள் கொஞ்சமும் யோசனை செய்ய வேண்டாம். இந்த அம்மாளை இவ்வளவு எளிதில் கொண்டு வர முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. இவர்களுடைய பங்களாவில் அசாத்தியமான காவலும் பாராவும் இருக்குமோ என்றும், நாம் நம்முடைய சொற்ப ஆள்களை வைத்துக் கொண்டே அத்தனை பேரையும் வென்று எப்படி உள்ளே நுழையப் போகிறோம் என்றும், இந்த அம்மாள் ஒரு வேளை விழித்துக் கொண்டு கத்தப் போகிறாளே என்றும், மோட்டாரில் வைத்துக் கொண்டு வரும் போது வழியில் யாராவது தடுத்து நிற்க வைத்து விடுவார்களோ என்றும், இந்த அம்மாளை நாங்கள் இங்கே கொண்டு வந்து சேர்க்கும் முன் ஒருவேளை மயக்கம் தெளிந்து போய்விடுமோ என்றும் நாங்கள் கவலைப்பட்டது இவ்வளவென்று சொல்லி முடியாது; நல்ல வேளையாக, எவ்வித இடைஞ்சலும் நேராமல் நம்முடைய உத்தேசம் வெகு சுலபத்தில் கைகூடி விட்டது. இதுபோலவே இனி பாக்கி உள்ள காரியங்களும் நிர்விக்கினமாகவே முடிந்து விடும் என்பதில் தடை இல்லை. இப்போது நமக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது என்பது பரிஷ்காரமாகத் தெரிகிறது. நாம் இருவரும் சிநேகம் செய்து கொண்ட பிறகு நாம் செய்த யோசனைகளில் இதுவரையில் அபஜெயம் ஏற்படவே இல்லை. நமக்கு ஏற்பட்ட பெரிய ஜெயத்தில் இது இரண்டாவது ஜெயமல்லவா?" என்றான்.

அதைக் கேட்ட மாசிலாமணி நிரம்பவும் பூரிப்படைந்து, "ஏன் இதை இரண்டாவது ஜெயம் என்று சொல்லுகிறீர்? இதை மூன்றாவது ஜெயம் என்றல்லவா சொல்ல வேண்டும்" என்றான்.

இடும்பன் சேர்வைகாரன் சிறிது யோசனை செய்து, "இது எப்படி மூன்றாவது ஜெயம்? உங்கள் தமையனார் விஷயம் முதலாவது. இது இரண்டாவது தானே"என்றான்.