பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

251

யாவது போனால், அங்கே இரண்டொரு நாள் இருந்து பழகிய பிறகு தான், எனக்கு சாதாரணமான நிலைமை ஏற்படுகிறது வழக்கம். வண்டி ஓடிக்கொண்டே இருக்கையில் சிலருக்குத் தூக்கம் சாதாரணமாக வந்துவிடுகிறது. நான் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் எனக்கு ரயிலில் மாத்திரம் தூக்கம் வருகிறதே இல்லை. உங்களுக்கு ஒரு வேளை தூக்கம் வருகிறதோ என்னவோ? அப்படியானால், தூங்குங்களேன். இங்கே யாரும் வராமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்" என்றாள்.

ரமாமணியின் தாய்:- (அன்போடு சிரித்து) நானும் உங்களைப் போலத்தான். எனக்கும் பரஸ்தலத்தில் தூக்கமே பிடிக்கிற வழக்க மில்லை. எனக்குத் தகுந்த ஜோடி யாருமில்லை என்று நினைத்திருந்தேன். நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். சரி, மற்றவர் வேண்டுமானால் தூங்கட்டும்; நாம் இருவரும் பேசிக் கொண்டிருப்போம்.

விதவையம்மாள்:- நாம் பேசிக் கொண்டிருந்தால், மற்றவர்களுக்கு அது உபத்திரவமாக இருக்குமோ என்னவோ, இது இராக்காலம் அல்லவா. நாம் நம்முடைய சுகத்தை அசட்டை செய்தாலும் பிறருக்கு மாத்திரம் எவ்வித இடைஞ்சலும் செய்யக்கூடாது.

ரமாமணியின் தாய்:- இங்கே வேறே யார் இருக்கிறார்கள்? ஒருத்தரும் இல்லை. இதோ படுத்திருப்பது என்னுடைய எஜமானர். அவர் அயர்ந்து தூங்கக்கூடியவர் அல்ல. அவர் தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் யாதொரு பேதமும் இருக்காது. நாம் பேசுவதை எல்லாம் அவர் கேட்டுக் கொண்டே தான் இருப்பார்; அதே சமயத்தில் தூங்கிக் கொண்டே இருப்பார். அதை நாம் தூக்கம் என்று சொல்லுவது சரியல்ல; உறக்கம் என்று சொல்ல வேண்டும். அதோ இருப்பது என்னுடைய மகளும், மருமகப் பிள்ளையும். அவர்கள் இருவரும் இளம் பருவத்தினர்; எட்டு நாள் வேண்டுமானாலும் தூங்காமல் ஒருவரோடு ஒருவர் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் இடி இடித்தால் அது அவர்களுடைய காதிற்படாது. அவர்கள் தங்கள் ஜோலியைக் கவனித்துக் கொண்டு தங்கள் பாட்டிலேயே இருப்பார்கள். ஆகையால், நம்மால் யாருக்கும் உபத்திரவம் உண்டாகப் போகிற தில்லை. எங்களைத் தவிர இந்த வண்டியில்