பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

255

உப்பரிகைகளும் உடைய பெரிய மாளிகை ஒன்று இருக்கிறது. ஆடு மாடுகள் பெட்டி வண்டிகள் ஆள் மாகாணங்கள் முதலிய சகலமான வைபவங்களும் இருக்கின்றன. என் எஜமானர் இருந்த வரையில் எல்லாவற்றிற்கும் நானும் சொந்தக்காரி என்றே எண்ணி சகல சம்பத்தையும் போக போக்கியங்களையும் அனுபவித்து வந்தேன். எங்களுக்கு ஈசுவரன் ஒரு கடுகல்வளவு ஆண் குழந்தையை அளித்திருந்தால், இன்னமும் அவைகளுக்கெல்லாம் நான் எஜமானியாகத் தான் இருப்பேன். எங்களுக்குப் புத்திர சந்தானமே இல்லாமல் போய்விட்டது. என் எஜமானர் திடீரென்று இறந்து போய்விட்டார். இதற்கு முன் கருப்போ சிவப்போ என்று கூடக் கண்டிராத அநந்தர வார்சுதார்கள் யார் யாரோ இப்போது முளைத்துவிட்டார்கள். என் புருஷருடைய சொத்துகள் யாவும் அவர்களுக்கே இனி சொந்தமாம்; நான் உயிரோடிருக்கும் வரையில், சுகமாக இருந்து சாப்பிடலாமாம். அதற்குமேல் அதிகமாக சொத்துகளை விநியோகிக்கவோ, பராதீனப்படுத்தவோ எனக்கு அதிகாரமே இல்லையாம். இது வரையில் நான் சகல சம்பத்துகளுக்கும் எஜமானியாய் இருந்தது போக, நான் இப்போது ஜீவனாம்சக்காரியாய் விட்டேன். நான் உயிரோடிருப்பது அவர்களுக்கெல்லாம் பெருத்த இடையூறாக இருக்கிறது. ஆகையால், அந்த அநந்தர வார்சுதார்கள் என்னை ரகசியமாகக் கொன்றுவிட வேண்டும் என்று பல வகையில் சதியாலோசனைகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிந்தது. ஆகையால் நானே அவர்களைக் கூப்பிட்டு, “நான் ஸ்தல யாத்திரை செய்யப் போகிறேன். எல்லாவற்றையும் இனி நீங்களே நிர்வகித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு வந்து, உலகத்தில் உள்ள கூேடித்திரங்களுக்கெல்லாம் போய் ஸ்வாமி தரிசனம் செய்து பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறேன். அப்படி நான் செய்யும் சுவாமி தரிசன புண்ணியத்தில் நல்ல நல்ல மனிதர்களுடைய பழக்கமும் சிநேகமும் எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. நான் இது வரையில் என்னுடையது, என்னுடையது என்று எண்ணியிருந்த பொருள் எல்லாம் பொய்ப் பொருளாகிவிட்டது. இப்போது கிடைக்கும் கடவுள் தரிசனம்,