பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

315

தன்றி, அவள் மனோன்மணியம்மாளை நோக்கி நிரம்பவும் பணிவாகவும், மரியாதையாகவும், நயமாகவும் பேசத் தொடங்கி, “அம்மா! கோபித்துக் கொள்ளாதே; பின்பக்கத்திலும் அசைப்பிலும் உன்னைப் பார்த்தவுடன், எங்கள் ஊரில் உள்ள ஒரு பெண் போல இருந்தது. உயரம், பருமன், நிறம், உடைகள் எல்லாம் தத்ரூபம் அப்படியே இருந்தன. அவளுடைய பெயர் ஞானாம்பாள் என்பது. ஆகையால் உன்னை ஞானாம்பாள் என்று கூப்பிட்டேன்; கோபித்துக் கொள்ளாதே தாயே!” என்று நிரம்பவும் கனிவாகவும், உருக்கமாகவும் கூறினாள்.

பெருத்த பணக்காரர் வீட்டு ஸ்திரீ போலக் காணப்பட்ட அந்த அம்மாளின் தோற்றத்தைக் கண்டு, அவள் கூறிய மரியாதையான வார்த்தைகளைக் கேட்கவே, மனோன்மணியம்மாள் கோபங்கொள்ளாதவளாய்த் தானும் மரியாதையாகப் பேசத் தொடங்கி, “பாதகமில்லை அம்மா! அடையாளம் தெரியாமையால், நீங்கள் என்னைக் கூப்பிட்டால், அது ஒரு பெரிய குற்றமா? அதற்காக நான் கோபித்துக் கொள்வேனா? பரவாயில்லை போங்கள்” என்றாள். அவள் கூறிய சொற்களைக் கேட்டு அதுபற்றி அவளிடம் நன்றி விசுவாவம் காட்டுகிறவள் போலத் தனது முகத்தைச் சந்தோஷமாக மலர்த்திப் புன்னகை செய்த வண்ணம் அந்த ஸ்திரீ அவ்விடத்தை விட்டுப் போக எத்தனித்து இரண்டோரடி அப்பால் எடுத்து வைத்த பின், எதையோ நினைத்துக் கொண்டவள் போலத் தயங்கி நின்று பின்புறம் திரும்பி மனோன் மணியம்மாளை மறுபடியும் பார்த்து, “அம்மா! குழந்தாய்! நீ இருப்பது இந்த ஊர்தானா?” என்று நயந்து வினவினாள்.

மனோன்மணியம்மாள், “ஆம்; இந்த ஊர் தான். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றாள்.

வயோதிக ஸ்திரீ “அம்மா! என் சொந்த ஊர் தெற்கே கரூர். இங்கே மயிலாப்பூரில் என் பெண் வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். என் மருமகப்பிள்ளை அந்த ஊரில் பிரபலமான ஒரு வக்கீல். ஆனால் அவருக்கும் எங்களுக்கும் மனஸ்தாபம் ஆகையால், நான் பக்கத்தில் எங்கேயாவது தங்கி இருந்து என் பெண்ணைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறேன். நான் நேற்று