பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மாயா விநோதப் பரதேசி பக்கிரியா பிள்ளையைப் பற்றிய விஷயம் தெரிந்துபோகும்" என்று ரகசியமாகவும் சைகைகளாலும் கூறினாள். விசாலாகூஜியம்மாள், "அந்தப் பத்திரத்தைப் பற்றிய விஷயம் எதையும் மாசிலாமணியிடம் சொல்ல வேண்டாம் என்று நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த அம்மாள் அதை வெளியிடவே மாட்டாள்" என்றாள். ரமாமணியின் தகப்பன், "அவனுக்குத் தெரிந்தால் தான் என்ன? அவன் நம்மை என்ன செய்ய முடியும்? அவனுடைய சிநேகந் தானே போகும்; போனால் போகிறது. ஐந்து லட்சம் ரூபாய்க்கு முன் மற்றதெல்லாம் ஒரு பொருட்டல்ல" என்றார். ரமாமணியம்மாள், "அவனுடைய சிநேகம் நமக்கு இருக்கிற வரையில் ஆதாயந்தானே. நீலலோசனி அதிக காலம் நம்முடைய ஊரிலிருந்தால், பக்கிரியா பிள்ளை விஷயத்தில் நாம் பொய் சொல்லியிருக்கிறோம் என்பது எப்படியும் அவள் காதுக்கு எட்டும். அதனால் பிறகு நமக்குக் கெடுதல் வரும். ஆகையால், நாம் கூடிய சீக்கிரம் ஊருக்குப் போய், குடிகார வக்கீலை ஒழித்த மாதிரி, அவளுக்கும் ஒருவழி செய்து விட்டால், அவளுடைய சொத்து முழுதும் உடனே வந்து விடும். அதன் பிறகு நாம் மாசிலா மணியோடு எப்போதும் போல இருந்து வரலாம் அல்லவா. ஐந்து லட்சத்திற்கு மேல் அதிகமாக சொத்து சேர்ந்தால், அது செரிக்காமல் போகுமா" என்றாள். அவ்வாறு அவள் கூறி வாய் மூடுமுன், நமது நீலலோசனி யம்மாள் மடிசஞ்சியும் கையுமாக அவர்களுக்கெதிரில் வந்து நின்றாள். அவளைக் கண்ட ரமாமணியம்மாள் முதலிய எல்லோரும் பெருத்த பூதத்தைக் கண்டு திடுக்கிட்டு நடுங்கும் குழந்தைகளைப் போல திக்பிரமை கொண்டு ஸ்தம்பித்துப் போயினர். அவர்களது தேகங்கள் அந்த ஒரு நிமிஷமும் கிடுகிடென்று ஆடின. முகங்கள் விகாரப்பட்டுப் போயின. அவள் மறுபடி திரும்பி அவ்விடத்திற்கு வருவாள் என்று அவர்கள் எதிர்பார்த்தவர்களே அன்று ஆதலால், அவளது வருகை அவர்களது மனத்தில் பெருத்த திகிலையும், பீதியையும்,