பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 மாயா விநோதப் பரதேசி மனோன்மணியம்மாள் எழுந்து உட்கார்ந்து கொள்ள முயன்ற வண்ணம், வடிவாம்பாளை நோக்கிப் புன்னகை செய்து, "வா, அக்கா, இப்படி வந்து உட்கார்ந்து கொள்" என்றாள். வடிவாம்பாள் மிகுந்த வியப்பும் உருக்கமும் காட்டி, "என்ன இது ஏனம்மா உன் உடம்பு இப்படி இளைத்துப் போயிருக்கிறது? இந்த இரண்டு தினங்களாய் நீ கண்ணில் படவில்லையே என்று நாங்கள் எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு ஒத்த படியே உன் நிலைமை இப்படி இருக்கிறதே!" என்று மிகுந்த வாத்சல்யத்தோடு கூறிய வண்ணம், கட்டிலின் மேல் ஏறி மனோன் மணிக்கருகில் உட்கார்ந்தபடி குழந்தையைத் தாய் அணைப்பது போல, அந்த மடந்தையை அணைத்துத் தடவிக் கொடுத்து, "ஆகா! தங்கம் போல இருந்த உன் உடம்பு எப்படி வாடித் துவண்டு போயிருக்கிறது! ஐயோ! பார்க்கச் சகிக்கவில்லையே!" என்று தழுதழுத்த குரலில் கூறினாள். அவளது மனது முற்றிலும் இளக்கம் அடைந்திருந்தது என்பது அவளது முகக்குறியில் நன்றாகத் தெரிந்திருந்தது. அவளது உதடுகள் நடுநடுங்கின. வார்த்தைகள் தடுமாறின. கண்களில் கண்ணிர் பொங்கி இரண்டு கன்னங்களின் வழியாகவும் கீழே வழிந்தோடியது. வடிவாம் பாளின் உண்மையான அனுதாபத்தையும் மனமார்ந்த வாஞ்சையும் மேலான குணங்களையும் காண மனோன்மணியம்மாளின் மனதில் கட்டிலடங்காத ஒருவித உணர்ச்சி பொங்கி எழுந்தது. ஆனந்தப் பெருக்கோ துயரப் பெருக்கோ என்பது தெரியாதபடி மனோன்மணியம்மாள் வடிவாம்பாளை ஆசையாகக் கட்டிக் கொண்டு கோவெனக் கதறியழத் தொடங்கினாள். அதைக் கண்ட வடிவாம்பாள் பதறிப் போய்விட்டாள். அவளது உயிர் தள்ளாடி யது. அவள் பன்மடங்கு அதிகரித்த வாஞ்சையும் உருக்கமும் காண்பித்து, "அழாதேயம்மா! அழாதே; ஏன் இப்படி அழுகிறாய்? உனக்கு என்ன குறைவு ஏற்பட்டது? ஒன்றுமில்லையே. நாம் உத்தேசித்த காரியம் வெகு சீக்கிரம் கைகூடி விடும். உனக்கு நிகரானவர்கள் இந்த உலகத்திலேயே இருக்கமாட்டார்கள் என்று எல்லோரும் நினைக்கும்படியான மகா சுகமான நிலைமையில் நீ இருந்து அமோகமாய் வாழப் போகிறாய். அதற்குக் கடவுளால் ஒரு காலம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தக் காலம் வெகு சீக்கிரம்