பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 275 புறத்தில் போடப்பட்டிருந்த கட்டிலின் மீது மனோன்மணி யம்மாள் சாய்ந்து கொண்டிருந்தாள். அவளது உடம்பு தங்கக் கொடி போலத் துவண்டு கிடந்ததானாலும், கந்தசாமி அதற்கு முன் பார்த்ததற்குப் காற்பங்காய் இளைத்து உருமாறிப் போயிருந்தது. அவள் மஞ்சள் பூசிக் குளித்து நெற்றியில் விபூதி, சாந்துத் திலகம் முதலியவற்றை அணிந்து உடம்பில் ஐந்நூறு ரூபாய் பெறத்தக்க பனாரீஸ் புட்டாப் புடவையையும் தலை முதல் கால் வரையில் ஏராளமான ஆபரணங்களையும் தரித்து தேஜோ மயமாகவும் மனோக்கியமாகவும் காணப்பட்டாள். முகம் வாட்டமடைந்து ஏக்கத்தைக் காண்பித்தது. அவளைக் கண்ட கந்தசாமி தான் அதற்கு முன் கண்ட மனோன்மணியம்மாள் அவள் தானோ என்று சந்தேகித்து, முற்றிலும் பிரமிப்படைந்து அப்படியே ஸ்தம்பித்து அவள் மீது வைத்த விழியை வாங்காமல் நின்றுவிட்டான். அவளுக்கருகில் வடிவாம்பாள் தனது இயற்கையான உத்தம லட்சணங்கள் ஜ்வலிக்க மகா சிரேஷ்டமான அலங்காரத்தோடு காணப்பட்டு கரை புரண்டு வழிந்த வாத்சல்யத்தோடு மனோன் மணியம்மாளைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். சிறிது நேரம் இருவரும் மெளனமாக இருந்தனர். அதற்குள் மனோன்மணி யம்மாள் நிரம்பவும் மிருதுவான குரலில் பேசத் தொடங்கி, "அக்கா! இந்த ஆவல் என்னைக் கொன்றுவிடும் போலிருக்கிறதே! ஐயோ! இந்த வேதனை என்னால் தாங்க முடியவில்லையே! அன்றைக்கு சுவாமி வாக்குக் கொடுத்தபடி இன்று தானே நான்காவது தினம். இன்னம் ஒரு சேதியும் தெரியவில்லையே. ஒரு வேளை அது பொய்யாய்ப் போகுமா?" என்று முற்றிலும் ஏங்கிக் கூறினாள். அவளது கண்ணிர் மாலை மாலையாகப் பொங்கி வழிந்தது. அவளது நிலைமை கல்லுங் கரைந்துருகத்தக்க மகா பரிதாபகரமான நிலைமையாய் இருந்தது. அதைக் கண்ட கந்தசாமி அப்படியே பிரமித்து நிலைகலங்கி நின்றுவிட்டான். அவனது மனம் பாகாய் உருக ஆரம்பித்தது. முகம் மிகுந்த கலக்கமும் இளக்கமும் காட்டின. கண்கள் உருகிக் கண்ணிர்த் துளிகளை வெளிப் படுத்தின. அந்த நிலைமையில் அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவனது இருதயத்தில் சுருக் சுருக்கென்று பாய்ந்து, அவன் முற்றிலும் நிலைதடுமாறி தான் என்ன செய்வதென்பதை அறியாமல் தவிக்கும்படி செய்துவிட்டது.