பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 35 இருந்ததும், வசீகரமான ஜரிகைத் தலைப்பைக் கொண்டதுமான நீலவர்ணப் புடவை ஒன்றை மனோன்மணியம்மாள் வெளியில் எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். அது பார்ப்பதற்கு நிரம்பவும் அழகாகவே இருந்தது. உடனே மனோன்மணியம்மாள் தனது உடம்பில் இருந்த வெள்ளை ஆடைகளை விலக்கிவிட்டு அந்த நீலவர்ணப் பட்டாடையை உடுத்திக் கொண்டாள்; பெட்டியில், ஒர் அறைக்குள் காணப்பட்ட பல இரவிக்கைகளில் ரோஜா வர்ணமுள்ள ஜரிகை ரவிக்கை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள். அவளது மனமே ஒருவித பிரமிப்பை அடைந்தது. தான் வெள்ளை ஆடைகள் அணிந்திருந்த காலத்தில் இருந்ததை விட அப்போது ஆயிரம் மடங்கு அதிக அழகாகவும் வசீகரமாகவும் இருப்பது போல அவளது மனத்திலேயே ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. உடனே அவள் குனிந்து பெட்டியில் இருந்த ஏராளமான வைர ஆபரணங்களில் பலவற்றை எடுத்து ஒவ்வொன்றாக அணிந்து கொண்டு பார்க்கப் பார்க்க தனது வனப்பும் வசீகரத் தன்மையும் அற்புதமாய் அதிகரித்துக் கொண்டே போவதாக அவளுக்குத் தோன்றவே அவள் தனது தலை முதல் கால் வரையில் ஏராளமான ஆபரணங்களை அணிந்து கொண்டவளாய், சிறிது தூரத்திற்கப்பால் இருந்த நிலைக் கண்ணாடிக்கெதிரில் போய் நின்று தனது புதிய வடிவத்தைப் பார்க்கவே, அவள் தனது விழிகளையே நம்பாமல் இரண்டு மூன்று தரம் தனது விழிகளைக் கசக்கி விட்டுக் கொண்டு உற்று நோக்கி, அப்படியே பிரமிப்படைந்து ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். "ஆகா! இந்த அலங்காரம் எவ்வளவு அழகாய் இருக்கிறது. சிவப்பாகவும் கொடி போலவும் இருக்கிற என் உடம்பை வெள்ளை மஸ்லின் புடவை அவ்வளவாக எடுத்துக் காட்டவில்லை. இந்த ஆடைகளும் நகைகளும் என் உடம்பின் அழகைப் பதினாயிரம் மடங்கு அதிகமாக அல்லவா எடுத்துக் காட்டுகின்றன. இந்த மன்னார் குடியார் வந்திருந்து விட்டுப் போகிற வரையில் நான் இப்படியே அலங்காரம் செய்து கொண்டிருந்தால் என்ன? அவர்கள் போன பிறகு வேண்டுமானால் நான் மறுபடி மஸ்லினை உடுத்திக் கொள்ளுகிறேன்" என்று அந்த மடந்தை எண்ணமிட்டிருந்த சமயத்தில், "அம்மா! அம்மா!" என்று வேலைக்காரி தன்னை