பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மாயா விநோதப் பரதேசி வேண்டாம்; எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு இந்த ஒர் இரவைக் கடத்தும்" என்று கூறிவிட்டு விரைவாக அவ்விடத்தை விட்டுப் போய்விட்டார். தூங்குகிறவன் போலப் படுத்திருந்த நமது இடும்பன் சேர்வைகாரன் அவ்விடத்தில் நடந்தவைகளை எல்லாம் நன்றாகக் கவனித்துத் தெரிந்து கொண்டான். அவனது மனத்தில் பலவித எண்ணங்கள் தோன்றின. வெளியில் இருந்து தனக்கு உதவி செய்யத் தகுந்த மனிதர்கள் யாரும் இல்லாத இந்த அன்னிய ஊரில் வந்து தான் சிறைப்பட நேர்ந்ததே என்றும், அந்தச் சமயத்தில் மாசிலாமணி சென்னையில் இருந்தால், அவன் தன்னை விடுவிக்க ஏற்பாடு செய்வான் என்றும் இடும்பன் சேர்வைகாரன் எண்ணினான். ரமாமணியம்மாள் முதலியோர் சென்னையில் இருந்தும் தனக்கு எவ்வித உதவி செய்யவும் முன் வரவில்லையே என்ற ஆத்திரமும் பொங்கி எழுந்தது. தான் சிறைபட்டுப் போனதைப் பற்றி அவர்கள் கும்பகோணத்திற்கு உடனே ஒரு தந்தியனுப்பினால் மாசிலாமணி வந்து தனக்கு உதவி செய்வான் என்ற நினைவு தோன்றியதானாலும், தான் ரமாமணி யம்மாளைப் பார்ப்பதற்கும் வகை இல்லை என்பதை உணர்ந்த அவன் மிகுந்த கவலையும் சஞ்சலமும் அடைந்த வனாய்த் தனது திக்கற்ற நிலைமையை எண்ணி எண்ணி ஏங்கி இருந்த தருணத்தில், அவ்விடத்தில் சுவரில் சாய்ந்தபடி உல்லாச மாக உட்கார்ந்து கொண்டிருந்த ஜானிஜான் கான் சாயப்பு இடும்பன் சேர்வைகாரனை நோக்கி மிருதுவாகவும் நயமாகவும் பேசத் தொடங்கி, "ஐயா! ஏன் இவ்வளவு பொழுதோடு படுத்துக் கொண்டீர்? இதற்குள் தூக்கம் வந்துவிட்டதா என்ன?" என்றார். கண்ணியமும் மிகுந்த செல்வமும் செல்வாக்கும் வாய்ந்தவராகத் தோன்றிய அந்த சாயப்பு தன்னை மதித்து தன்னோடு பேசமாட்டார் என்று அவன் நினைத்ததற்கு மாறாக தான் எதிர்பாரா வகையில் அவர் தன்னோடு சிநேக பாவமாய்ப் பேச்சுக் கொடுத்ததை உணர்ந்த இடும்பன் சேர்வைகாரன் மிகுந்த களிப்பும் ஊக்கமும் அடைந்தான். தனது திக்கற்ற நிலைமையில் அந்தப் பெரிய மனிதரோடு தாம் பழக்கம் செய்து கொண்டு அவர் வெளியில் போனபின் அவரைக் கொண்டு மாசிலாமணிக்குச் செய்தி அனுப்பலாம் என்ற நினைவு தோன்றியது ஆகையால்,