பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 95 வேண்டும் என்றும், வர முடியாவிட்டால், அதை அந்த ஆள்வசம் கொடுத்தனுப்ப வேண்டும் என்றும் எழுதி முடித்தான். அதைத் தவிர வேறு எந்த விஷயத்தையும் அவன் அதில் குறிக்கவில்லை. அவ்வாறு எழுதப்பட்ட கடிதத்தை அவன் சாயப்புவினிடம் கொடுக்க, அவர் அதை வாங்கிப் படித்துப் பார்த்து, அது நிரம்ப வும் ஜாக்கிரதையாகவும் நன்றாகவும் எழுதப்பட்டிருக்கிறதென்று அவனைப் புகழ்ந்து, அதைத் தாம் வெளியில் போனவுடன் ஒர் உறையில் போட்டு ஒட்டித் தமது ஆள்வசம் கொடுத்து அனுப்பி விடுவதாக உறுதி கூறி மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டதன்றி, மாசிலாமணியின் விலாசத்தையும் கேட்டு இன்னொரு காகிதத்தில் குறித்துக் கொண்டார். அதன் பிறகு சாயப்பு, "ஐயா! இந்தப் போலிஸ் சப் இன்ஸ் பெக்டர் இன்னொரு வேடிக்கையான சங்கதிகூடத் தெரிவித்தார். இந்த ஊர்க் கலெக்டருடைய பெண்ணைக் கட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த மாப்பிள்ளை என்ன செய்தானாம், அந்தப் பெண்ணை அவன் இதற்கு முன் பார்த்ததே இல்லையாம். அவளுடைய அழகும் குணமும் எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதற்காக அவன் பெண் வேஷம் போட்டுக் கொண்டானாம். அவனுடைய சிநேகிதன் ஒருவனையும் கூட்டிக் கொண்டு, பெண்ணின் புதிய சம்பந்தி வீட்டு மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டு, அவர்களுடைய பங்களாவிற்குப் போய் அந்தப் பெண்ணோடு பேசிக் கொண்டிருந்தானாம். அந்தப் பெண் அந்தத் தகவலைத் தன் தகப்பனாருக்குத் தெரிவித்ததாம். அவர் உடனே மன்னார்குடிக்குத் தந்தி கொடுத்தாராம். அப்படிப்பட்ட உறவினர் தங்களுக்கு யாரும் இல்லை என்று மன்னார்குடியார் மறு தந்தி கொடுத்தார்களாம். உடனே கலெக்டர் போலீசாருடன் வந்து உண்மையை விசாரிக்க, அவர்கள் உண்மையைச் சொல்ல வில்லையாம். அவர்களைப் போலீசார் அவ்விடத்தில் இராத்திரி முழுதும் அடைத்து வைக்க உத்தேசித்துப் பூட்டி வைத்தார்களாம். அந்தச் சமயத்தில், கலெக்டருடைய பெண்ணை அபகரித்துப் போக வந்த யாரோ விரோதிகள் ஆள்மாறாட்டமாக பெண் வேஷத்தோடிருந்த மாப்பிள்ளையைத் தூக்கிக் கொண்டு போய்