பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

நா. வானமாமலை

முரண்பாட்டின் விளைவான தன்மைகள் தரப்பட்டுள்ளன. பன்முகமான கலைப்படிமம் அவன்.

ஓர் அறிவியல் கருத்து, ஓர் இயற்கை அம்சத்தின் சாரத்தை உள்ளடக்கிக் கொண்டிருக்கும். அதற்கு ஒரே பொருள்தான் இருக்கும். உதாரணமாக அணு எண் (Automic number) எந்த விஞ்ஞானியாலும் ஒரேவிதமாகப் பொருள் கொள்ளப்படும். இதுபோலவே நியூட்டனது குளிர்தல் விதி, பாய்ச்சுவது அழுத்தவிதி, ஈன்ஸ்டினது E = MC2 என்ற விதி, பிரதான குவாண்டம் எண் ஆகிய ஒவ்வொன்றும் ஒரே பொருள் தருவனவாகத்தான் உள்ளன. எந்த விஞ்ஞானக் கருத்தும் இரு பொருள் கொள்ள இடம் அளிக்காது.

ஆனால் கலைப்படிமம் அறிவியல் கருத்தைப் போன்றதல்ல பொதுவான ஓர் அம்சத்தின் சாரத்தை (அறிவியல் விதியைப் போல) படிமம் பிரதிபலித்த போதிலும், யதார்த்தப் பொருளின் பல்விதத் தோற்றங்கள், அம்சங்கள், மனித உள்ளத்தைக் இயல்புகள் ஆகியவற்றையும் தனது உருவத்தில் பிரதிபலிக்கும். ஆயினும் அது முழுமையான ஒருமையாகவே இருக்காது யதார்த்தத்தின் தன்மைகள், பன்முகக் கூறுகள், பண்புகள் அனைத்தையும் பிரதிபலித்து, அதுவாகவே கூடிய மட்டும் தோற்றமளிக்கும். இதனாலேயே படிமத்தை வெவ்வேறு விதத்தில் பொருள் கொள்ள முடிகிறது. அளவுக்குட்பட்டு அடிப்படையை மாற்றாமல் இவ்வாறு பொருள் கொள்வது தவறாகாது.

உண்மையான கலைப் படைப்பு என்பது முழு உலகத்தின் பிரதிபலிப்பு. தமிழ் நாட்டின் வாழ்க்கை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை ஒரு பெரிய மலையை, ஒரு கண்ணாடிக்குள் காட்டுவதுபோலத் தமது காப்பியத்தில் தாம் படைத்திருப்பதாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் முடிப்புரையில் கூறுகிறார்.

கலை ஒரு பிரதிபலிப்பு என்பதையும் தமிழ்நாட்டின் வாழ்க்கை முழுவதையும் கண்ணாடியில் படிமம் போலக் காட்டுவது தமது கலை நோக்கம் என்றும் அவர் கூறுகிறார்.

தமிழ் நாட்டைப் பற்றிய படிமத்திற்குப் பதிலாக, தற்கால வரையறையில் உலகத்தைச் சிறிய அளவில் கட்புலனாகும்படி செய்வதே கலைப் படிமம். இன்று மனிதனது தன்மை உலக வியாபகமானது.

ஒரு கலைப் படிமத்தில் யதார்த்தத்தில் இருப்பதைவிட ஓர் அம்சம் மிகையாகச் சித்திரிக்கப்படலாம். இதனை மிகை நவிற்சி, மிகைப்படைப்பு என்று கூறலாம். காப்பியங்களிலும் நாட்டுக் கதைப் பாடல்களிலும் இது ஓர் இன்றியமையாத மரபு. தசரதனுக்கு 60,000 மனைவியர், 60,000 அமைச்சர்கள்,