பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

நா. வானமாமலை

வள். இப்பருவப் பெண்களில் அவன் மேல்தட்டு வாழ்க்கையில் நுழையக் கைகொடுக்கக்கூடிய லொண்ட்ராவைத் திருமணம் செய்துகொள்ள நிச்சயித்தான். ரொபர்ட்டாவின் மீதுள்ள காதல், உயர்மட்ட வாழ்க்கை மீது கிளைடு கொண்ட பேராசைக்கெதிரே நிலைக்க முடியவில்லை. தேய்ந்து துரும்பாய்ப் போயிற்று. ரொபர்ட்டாவிற்கு கிளைட், செல்வம், ஆடம்பரம் இவற்றின் உருவமாக விளங்கினான். இன்னும் அவை வசப்படவில்லையாயினும் இனி ஒரு நாள் அவன் செல்வம் பெற்று ஆடம்பர உலகில் நுழைவான் என்று நம்பினாள். இவனை எப்படியாவது தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படியான நிலைமைகளை ஏற்படுத்த அவள் விழைந்தாள். அவனோடு அவள் உடலுறவு கொண்டாள். இது நல்லதல்ல; ஒழுக்கக் குறைவானது, சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்று தெரிந்துமே அவள் அப்படிச் செய்தாள்.

கிளைடின் ஆன்மா வளர்ச்சி பெறுவதைச் சமூக மதிப்புப் பெறும் ஆசை தடை செய்தது. கிளைட் - ரொபர்ட்டா காதல் ரொபர்ட்டாவின் சாவில் சென்று முடிந்தது. இச்சாவு எப்படி ஏற்பட்டது?

கிளைடு ஒரு செய்தித்தாளைப் படிக்கிறான். அதில் ஒரு செய்தியைக் காண்கிறான். பாஸ் ஏரியில் ஒரு மனிதனும், பெண்ணும் மூழ்கிவிடுகிறார்கள்; பெண்ணின் உடல் மட்டும் அகப்படுகிறது என்ற செய்தி காணப்படுகிறது. நாவலாசிரியர், இச்செய்தி கிளைடின் மனத்தில் ஏற்படுத்திய சிந்தனை யோட்டத்தைச் சித்திரிக்கிறார். 'இப்படியொரு விபத்தைச் சிருஷ்டித்தால் என்ன? இவ்வளவு சிக்கலான பிரச்சினைக்கு இது ஒரு சுலபமான தீர்வு' என அவன் நினைக்கிறான்.

ஆனாலும் இது ஒரு பயங்கரமான கொலை என்று நினைக்கிறான். மனம் இரண்டுபடுகிறது. போராட்டம். இது தவறு, தவறு என்று அவனது மானுடத் தன்மை கதறுகிறது. ஆனால் 'உயர்நிலை' வாழ்க்கை ஆசை அவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறது. டிரீஸர் இம்முரண்பாட்டையும் அதன் தீர்வையும் இயக்கவியல் பார்வையில் காண்கிறார்.

கிளைடை இதயமற்ற கல்நெஞ்சனாகவும் கொலைகாரனாகவும் காட்ட டிரீஸர் விரும்பவில்லை. அதே சமயம் அவனுடைய செயலை நியாயப்படுத்தவுமில்லை.

ரொபர்ட்டாவின் சாவுக்கு கிளைட்தான் காரணம் என்று நிரூபிக்க அமெரிக்கச் சட்ட நிபுணர்களால் முடியவில்லை, கிளைடு குற்றவாளிதான். ஆனால் அவன் அவளைக் கொல்ல வில்லை. அவனது மனசாட்சியின் குத்தல்களால் அவன் மனம் குழம்பியிருக்கிறான்.