பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும்

55


மூன்றாவது பகுதி நீதிமன்ற விசாரணையைச் சித்திரிக்கிறது. மறுபடியும் சில நிகழ்ச்சிகள் வாசகன் மனக்கண் முன் நிழலாடுகின்றன. சமூகத்தின் குற்றம் நிரூபிக்கப்படுகிறது. ஆனால் நீதிபதிகள் கிளைடைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக் கின்றனர். சமூகம், கிளிடைக் குற்றவாளியாக்கியது. அதே சமூகம் அவனை மின்சார நாற்காலிக்கு அனுப்புகிறது.

கைதியாக இருக்கும் கிளைடின் சிந்தனைகள், நீதிபதிகளின் முதலாளித்துவச் சார்பு நோக்கைத் தெளிவாகக்காட்டுகின்றன.

கிளைடின் சோக நிலைமை இரண்டு அம்சங்கள் கொண்டது. ஒன்று, அவன் கொலை செய்தது; இரண்டாவது, அவனைக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விசாரணைக் காலத்தில் அவன் இரண்டு முதலாளித்துவக் கட்சிகளின் போராட்டத்தில் கால்பந்தாக உதைபடுகிறான். நீதிமன்றத்தின் சார்புத்தன்மை, குழு நலன்களைப் பாதுகாக்க நீதிமன்றம் சட்டத்தைப் பயன்படுத்துவது, இப்பணியைச் செய்வதில் வழக்கறிஞர்களது பங்கு எல்லாமே விசாரணைக் காட்சிகளில் அம்பலப்படுத்தப்படுகின்றன.

ரொபர்ட்டாவும் கிளைடும் சமூக மதிப்புகளான 'உயர்ந்த ஆடம்பர வாழ்க்கை' என்ற முதலாளித்துவ மாயா உலகில் நுழைய ஆசைப்பட்டு அழிந்துபோகிறார்கள்.

இங்கு தனி மனித வாழ்க்கை, சமூக வாழ்க்கையோடு இணைக்கப்பட்டு அழிவில் சென்று முடிகிறது. முதலாளித்துவச் சமூக வாழ்க்கையின் ஓரச்சார்பு தெளிவாக்கப்படுகிறது. யாருடைய நலன்களைப் பாதுகாக்கச் சட்டமும் நீதிமன்றங்களும் உள்ளன என்பதைக் கிளைடு மின்சார நாற்காலியில் ஏறி உட்காருவதற்கு முன் உணருகிறான்.

முதலாளித்துவம் தனி மனிதனை அழிக்கிறது என்ற கருத்தை டிக்கன்ஸ் 'ஹார்டு டைம்ஸ்' என்ற நாவலின் பொருளாகக் கொண்டுள்ளார்.

ஸோலாவின் நாவல்கள் இதே கருத்தை வேறுவிதமாகக் காட்டுகின்றன.

அப்டன் சிங்க்ளேரின் எண்ணெய் (Oil), காடு (jungle) என்ற நாவல்கள் அமெரிக்க முதலாளித்துவ அமைப்பில் தொழிலாளிகளது வாழ்க்கையை மிகவும் ஸ்தூலமாகச் சித்திரிக்கின்றன.

நிலக்கரி ராஜா என்ற நாவலில் அவர் சுரங்கத் தொழிலாளிகளின் வாழ்க்கையையும், எண்ணெய் என்ற நாவலில் எண்ணெய்த் தொழிலாளிகளின் வாழ்க்கையையும் சித்திரிக்கிறார். காடு என்ற நாவலில் மாட்டிறைச்சித் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் வாழ்க்கையை வருணிக்கிறார்.